தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு
தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு நேற்று தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.;
சென்னை,
சட்டமன்றத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் பல கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. நீண்ட இழுபறிக்கு பின்னர் தொகுதிகள் உடன்பாடு நிறைவுபெற்றது. இதில் சில கட்சிகளுக்கு நேற்று தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று இரவு சென்னை அண்ணா அறிவாலயம் வந்தார். ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 இடங்கள் அடங்கிய தொகுதி பட்டியல் உடன்படிக்கை ஒப்பந்தத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், வைகோவும் கையெழுத்திட்டனர்.
ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 தொகுதிகள் விவரம் வருமாறு:-
1.மதுராந்தகம் (தனி).
2.சாத்தூர்.
3.பல்லடம்.
4.மதுரை தெற்கு.
5.வாசுதேவநல்லூர் (தனி).
6.அரியலூர்.
மேற்கண்ட தொகுதிகளில் தி.மு.க.வின் ‘உதயசூரியன்' சின்னத்தில் ம.தி.மு.க. போட்டியிட உள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி
இதேபோல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதன்படி அந்த கட்சிக்கு கடையநல்லூர், சிதம்பரம், வாணியம்பாடி ஆகிய 3 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கான உடன்படிக்கை ஒப்பந்தத்தில் மு.க.ஸ்டாலினும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனும் கையெழுத்திட்டனர்.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வாணியம்பாடி, விழுப்புரம், மணப்பாறை, பூம்புகார், கடையநல்லூர் ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
ஆதித்தமிழர் பேரவைக்கு அவினாசி
தி.மு.க. கூட்டணியில் ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சிக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தநிலையில் ஆதி தமிழர் பேரவை கட்சிக்கு அவினாசி (தனி) தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் மு.க.ஸ்டாலின், ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
மக்கள் விடுதலை கட்சிக்கு நிலக்கோட்டை (தனி) தொகுதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் மு.க.ஸ்டாலின், அந்த கட்சியின் தலைவர் முருகவேல்ராஜன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
2 கட்சிகளும் தி.மு.க.வின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட உள்ளன.