அர்ஜூனமூர்த்தி கட்சிக்கு ‘ரோபோ' சின்னம் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ரெயில், பஸ்சில் இலவச பாஸ் என வாக்குறுதி
அர்ஜூனமூர்த்தியின் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சிக்கு ரோபோ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. இதன் அறிமுக விழாவில், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ரெயில், பஸ்களில் இலவச பாஸ் வழங்கப்படும் என்று கட்சியின் தலைவர் அறிவித்தார்.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்தபோது அவரது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டவர் அர்ஜூனமூர்த்தி. ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் முடிவில் இருந்து பின்வாங்கியதால் அர்ஜூனமூர்த்தி இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
இந்த கட்சிக்கு ரோபோ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. சின்னம் அறிமுக விழா மற்றும் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது.
பஸ், ரெயிலில் இலவச பாஸ்
தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அர்ஜூனமூர்த்தி, அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து கூறியதாவது:-
ஆரோக்கியத்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை அடிப்படையாக வைத்து ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் தினந்தோறும் இலவசமாக அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரை பால் வழங்கப்படும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ரெயில், பஸ்களில் இலவச பாஸ் வழங்கப்படும்.
தமிழக அரசு நிர்வாகம் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஒரு மண்டலத்துக்கு ஒருவர் என 4 துணை முதல்-அமைச்சர் நியமிக்கப்படுவர். 9 மாதம் முதல் 9 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.