தொகுதி கண்ணோட்டம்: மயிலாப்பூர்
சென்னையில் உள்ள மிகப்பழமைவாய்ந்த தொகுதியாகவும், ஆன்மிக தலங்கள் நிறைந்த தொகுதியாகவும் விளங்குவது மயிலாப்பூர்.;
சென்னையில் உள்ள மிகப்பழமைவாய்ந்த தொகுதியாகவும், ஆன்மிக தலங்கள் நிறைந்த தொகுதியாகவும் விளங்குவது மயிலாப்பூர். கடந்த 1952-ம் ஆண்டு முதல் இந்த தொகுதி சட்டமன்ற தேர்தலை சந்தித்து வருகிறது. கபாலீஸ்வரர், ஆதிகேசவ பெருமாள், சீனிவாச பெருமாள், மாதவப் பெருமாள், முண்டகக்கண்ணி அம்மன் ஆகிய கோவில்களும், புகழ்பெற்ற சாந்தோம், லஸ் தேவாலயம் என முக்கிய ஆன்மிக தலங்களை கொண்டது. உலகப் பொதுமறையான திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் இங்குதான் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. அவருக்கு இங்கு கோவிலும் இருக்கிறது. அதேபோல், விவேகானந்தர் தொடங்கிய ராமகிருஷ்ண மடத்தின் கிளை ஒன்றும் மயிலாப்பூரில் அமைந்துள்ளது.
1952 மற்றும் 1957-ம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சி.ஆர்.ராமசாமி தொடர் வெற்றி பெற்றார். 1962 மற்றும் 1967-ம் ஆண்டு தேர்தல்களில் தி.மு.க. வேட்பாளர் அரங்கண்ணல் வாகை சூடினார். 1971-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஆனந்தநாயகியும், 1977-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.வின் டி.கே.கபாலியும் வெற்றி பெற்றனர். இதே டி.கே.கபாலி 1980-ம் ஆண்டு தேர்தலில் அணி மாறி, அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1984-ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ப.வளர்மதியும், 1989-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் என்.கணபதியும், 1991-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் டி.எம்.ரங்கராஜனும், 1996-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் என்.டி.ராமஜெயமும் என மாறி மாறி வெற்றி பெற்றனர்.
2001-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் கே.என்.லட்சுமணன் வெற்றி பெற்றார். 2006, 2011 ஆகிய தேர்தல்களில் முறையே அ.தி.மு.க. வேட்பாளர்கள் எஸ்.வி.சேகர், ராஜலட்சுமி ஆகியோர் வெற்றி பெற்றனர். 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் இந்தத் தொகுதியில் அ.தி.மு.க.வே ‘‘ஹாட்ரிக்’’ வெற்றியை பதிவு செய்தது. அக்கட்சி வேட்பாளர் ஆர்.நடராஜ் 14,728 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கராத்தே தியாகராஜனை தோற்கடித்தார். காங்கிரசை தவிர பா.ஜ.க., பா.ம.க., த.மா.கா., நாம் தமிழர் கட்சி உள்பட 23 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்
மொத்த வாக்குகள் 2,62,907
பதிவான வாக்குகள் 1,56,145
ஆர்.நடராஜ் (அ.தி.மு.க.) 68,176
கராத்தே தியாகராஜன் (காங்கிரஸ்) 53,448
தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில், மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி இடம்பெற்றுள்ளது. ஆயிரம்விளக்கு, திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, தாம்பரம் ஆகிய தொகுதிகள் இதன் எல்லையாகும். சென்னை மாநகராட்சி வார்டுகளை கணக்கில் எடுத்துக்கொண்டால், 94, 96, 115 மற்றும் 142 முதல் 150 வரையிலானவை அடங்கியுள்ளன.
மயிலாப்பூர் தொகுதியை பொறுத்தவரை, பிராமணர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், வடமாநிலத்தவர்கள் குறிப்பிடும்படி அளவுக்கு இருக்கின்றனர். ஆதிதிராவிடர் மக்களும் கணிசமாக உள்ளனர். மீனவ மக்களும் அதிகம் இருப்பதால், இந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் சக்தியாக மீனவர்கள் விளங்குகின்றனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது இந்த தொகுதியில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 907 வாக்காளர்கள் இருந்தனர். கடந்த 5 ஆண்டுகளில் புதிய வாக்காளர்கள், தொகுதிமாறி வந்தவர்கள் என பலர் வாக்காளர்களாக இணைந்தனர். போலி வாக்காளர்களும் நீக்கப்பட்டனர். அதன் அடிப்படையில், தற்போது 6,493 வாக்காளர்கள் அங்கு அதிகரித்துள்ளனர்.
மயிலாப்பூர் தொகுதி மக்களுக்கு பிரச்சினை என்று எடுத்துக்கொண்டால், குடி தண்ணீர் பிரச்சினை பெரிதாக இருக்கிறது. குடிநீர் வினியோகம் முறையாக இல்லாததால், பொதுமக்கள் தண்ணீருக்காக அலைய வேண்டியிருப்பதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். குப்பைகள் முறையாக அகற்றப்படாததும் மற்றொரு புகார். கோவில்கள் அதிகம் உள்ள பகுதியாக இருந்தாலும், அந்த கோவில்களில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.
மயிலாப்பூர் தொகுதியில் இதுவரை நடந்த 15 சட்டமன்ற தேர்தல்களில், அ.தி.மு.க. 6 முறையும், தி.மு.க. 5 முறையும், காங்கிரஸ் 3 முறையும், பா.ஜ.க. ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக நடைபெற்ற 3 தேர்தல்களில் இங்கு அ.தி.மு.க.வே ‘‘ஹாட்ரிக்’’ வெற்றியை பதிவு செய்துள்ளது. எனவே, இந்த வெற்றிக்கு அணைபோடும் வகையில் தி.மு.க. கூட்டணியில் இருந்து வேட்பாளர் களம் இறக்கப்படுவார் என தெரிகிறது. என்றாலும், இந்த தொகுதியில் அ.தி.மு.க.வின் கையே சற்று ஓங்கியுள்ளது.