திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு கடையநல்லூர் தொகுதி உறுதி

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு மொத்தம் 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-03-09 06:07 GMT
சென்னை,

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக மற்றும் திமுக கட்சிகளின் சார்பில் முக்கியக் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடர்ந்து பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

இதன்படி தி.மு.க தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தை கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதி தமிழர் பேரவை உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

இதில், காங்கிரஸ் கட்சிக்கு 25, வி.சி.க, ம.தி.முக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும், தமிழர் வாழ்வுரிமை கட்சி, ஆதி தமிழர் பேரவைக்கு தலா ஒரு தொகுதியும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், 3 தொகுதிகள் எவை என்பது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதிர் மொய்தீன் இன்று திமுக தேர்தல் குழுவை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார். 

முதல்கட்ட பேச்சுவார்த்தையில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு கடையநல்லூர் தொகுதி உறுதி செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய 2 தொகுதிகளாக ஆம்பூர் அல்லது வாணியம்பாடி, சிதம்பரம் அல்லது பாபநாசம் இவற்றில் எதேனும் ஒதுக்கும்படி ஐ.யூ.எம்.எல். கட்சி திமுகவிடன் கோரிக்கை விடுத்துள்ளது.

தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக 2-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் நடைபெறும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்