குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500 ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர் இலவசம் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும், ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர் இலவச மாக கொடுக்கப்படும் என்றும் மகளிர் தினத்தையொட்டி அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதியாக எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்தார்.;

Update: 2021-03-09 01:00 GMT
சென்னை, 

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 6-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 12-ந் தேதி தொடங்குகிறது.

அ.தி.மு.க. தொடர் ஆலோசனை

அ.தி.மு.க. முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு தொடர்பான பணிகள் குறித்து அ.தி.மு.க. தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று மாலை 5 மணிக்கு அ.தி.மு.க. 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு தொடர்பான பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமானஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை வகித்தனர். துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் உள்ளிட்ட ஆட்சிமன்ற குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நிர்வாகிகள் சி.பொன்னையன், கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன், செம்மலை, சி.வி.சண்முகம், ஓ.எஸ்.மணியன், ஜே.சி.டி.பிரபாகர், எஸ்.கோகுல இந்திரா, அன்வர் ராஜா, டாக்டர் வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வரைவு தேர்தல் அறிக்கை

இந்த கூட்டத்தில் வரைவு தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு வழங்கியதாக கூறப்படுகிறது.

அந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் குறித்து நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டதாகவும், கூடுதலாக சில அம்சங்களை சேர்க்கக்கோரியதாகவும் கூறப்படுகிறது. மேலும் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு மற்றும் அதுதொடர்பான பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டம் மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணி வரை நடந்தது.

எடப்பாடி பழனிசாமி பேட்டி

அதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, அனைத்து மகளிருக்கும் நல்வாழ்த்துகள். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். அதில் பல்வேறு திட்டங்கள் மக்களின் மனம் நிறைவுபெறும் விதத்தில் அறிவிப்புகள் இடம்பெறும். அதில் மகளிர் நலனுக்காக குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில்லாமல் வழங்கப்படும். சமூகத்தில் பொருளாதார சமநிலையை ஏற்படுத்தும் விதமாக குடும்பத்துக்கு மாதந்தோறும் ரூ.1,500 குடும்ப தலைவியிடம் வழங்கப்படும். மேலும் பல அறிவிப்புகள் விரைவில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

விரைவில் நிறைவு

கேள்வி:- அ.தி.மு.க. அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியிடப்படும்?

பதில்:- 12-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. அதற்குள் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

கேள்வி:- வேட்பாளர் தேர்வு குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே?

பதில்:- அப்படி எதுவும் இல்லை.

கேள்வி:- கூட்டணி கட்சிகளுடன் நடந்துவரும் தொகுதி பங்கீடு எப்போது நிறைவுபெறும்?

பதில்:- தொகுதி பங்கீடு நடந்து வருகிறது. விரைவில் நிறைவு பெறும்.

கேள்வி:- தே.மு.தி.க. உடனான பேச்சுவார்த்தை எந்த கட்டத்தில் இருக்கிறது? நாளை (இன்று) தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறதே?

பதில்:- தே.மு.தி.க.வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

மக்கள் மனம் நிறைவு பெறும் வகையில்...

கேள்வி:- தேர்தலில் அ.தி.மு.க. எத்தனை தொகுதிகளில் நேரடி போட்டிபோட போகிறது?

பதில்:- கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்தவுடன் அனைத்து தகவல்களும் வெளியிடப்படும்.

கேள்வி:- தேர்தலில் புது முகங்களுக்கு அதிக வாய்ப்பு தரப்போவதாக தகவல் வருகிறதே?

பதில்:- அந்த கட்டத்துக்கு இன்னும் போகவில்லை.

கேள்வி:- அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளை பா.ஜ.க. கேட்டுள்ளதாக கூறப்படுகிறதே?

பதில்:- பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அது நிறைவாகும் போது எல்லா தகவல்களும் வெளியிடப்படும்.

கேள்வி:- தேர்தல் அறிக்கையில் இன்னும் நிறைய அம்சங்கள் இருக்குமா?

பதில்:- மக்களின் மனம் நிறைவு பெறும் வகையில் எங்கள் தேர்தல் அறிக்கை இருக்கும்.

மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி தான்

கேள்வி:- தி.மு.க. கூட்டணி வலுவாக இருக்கிறதா? நாடாளுமன்ற தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளதே?

பதில்:- நாடாளுமன்ற தேர்தல் வேறு. சட்டமன்ற தேர்தல் வேறு. இது மாநிலத்துக்கு நடைபெறுகிற தேர்தல். விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதே வெற்றி நடைபெறவுள்ளசட்டமன்ற தேர்தலிலும் கிடைக்கும்.

கேள்வி:- தேர்தல் கருத்துக்கணிப்பை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- அ.தி.மு.க. கூட்டணி மக்களிடம் மிகப்பெரிய செல்வாக்கை பெற்றுள்ளது. கடந்த 4½ ஆண்டு காலமாக நிறைய திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். 2011-ம் ஆண்டில் ஜெயலலிதா முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து இன்று வரை அ.தி.மு.க. அரசு நிறைய திட்டங்களை நிறைவேற்றி, நாட்டு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. மக்கள் செல்வாக்கு இருந்த காரணத்தால் தான் இடைத்தேர்தல்களில் நாங்கள் வெற்றிபெற்றோம். மக்கள் மீண்டும் அ.தி.மு.க. அரசுதான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று எண்ணுகிறார்கள். அதை இடைத்தேர்தல்கள் மூலமே மக்கள் எங்களுக்கு தெளிவுபடுத்திவிட்டார்கள்.

திருச்சி தி.மு.க. பொதுக்கூட்டம்

கேள்வி:- திருச்சியில் நடந்த தி.மு.க.வின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- சமீபத்தில் தலைவாசலில் மகளிர் குழு கூட்டம் நடத்தினேன். 4 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து சுமார் 40 ஆயிரம் பேர் வந்திருந்தனர். ஆனால் தமிழகம் முழுவதும் தி.மு.க. நடத்திய பொதுகூட்டத்தில் ஒரு லட்சம் பேர் தான் கலந்துள்ளனர். போட்ட நாற்காலிகள் கூட 56 ஆயிரம் தான். எண்ணிக்கை குறித்த எல்லா தகவல்களும் இருக்கிறது. இதிலேயே கட்சியின் செல்வாக்கு எப்படி இருக்கிறது? என்பதை தெரிந்துகொள்ளலாம்.

கேள்வி:- சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- அவரே ஒதுங்கிவிட்டாரே... இதை நான் எப்படி பார்க்கிறேன் என்றால் என்ன சொல்வது? இருந்தா சொல்லலாம்.

கேள்வி:- தேர்தலில் டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. போட்டியிடுகிறதே?

பதில்:- இந்தியாவிலே கட்சி ஆரம்பிக்க அனைவருக்கும் உரிமை இருக்கிறது. அவர் ஒரு கட்சி ஆரம்பித்துள்ளார். அதற்கு நான் என்ன சொல்லமுடியும். இந்தியாவில் உள்ள கட்சிகளில் அ.ம.மு.க.வும் ஒன்று அவ்வளவுதான்.

சாத்தியம் இல்லை

கேள்வி:- அ.தி.மு.க- அ.ம.மு.க. இணைப்பு சாத்தியமா?

பதில்:- இணைப்பு சாத்தியமில்லை என்று ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளேன். அ.தி.மு.க.வில் இருந்து விலகி சென்ற நிர்வாகிகள்-தொண்டர்கள் மீண்டும் இணைய விருப்பப்பட்டால் தலைமை அதுகுறித்து முடிவு செய்யும். ஏற்கனவே ஏராளமானோர் வந்துள்ளனர். பலர் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். அதுகுறித்து கட்சி தலைமை முடிவு செய்யும்.

கேள்வி:- அ.தி.மு.க.வுக்கு சிறுபான்மை கட்சிகள் அவ்வளவாக ஆதரவு தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறதே?

பதில்:- கட்சி என்று பார்க்கக்கூடாது. இன்று கூட இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் எங்களுக்கு வந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இஸ்லாமிய-கிறிஸ்தவ சமுதாயத்தினர் என சிறுபான்மை சமுதாய மக்கள் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு பேணி காக்கப்படுகிறது. இந்தியாவிலேயே அமைதி பூங்காவாக தமிழகம் விளங்குகிறது. சிறுபான்மை மக்கள் எவ்வித அச்சமின்றி தொழில் செய்கிறார்கள். நிம்மதியாக வாழ்கிறார்கள்.

மேற்கண்டவாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

தி.மு.க. அறிவித்த தேர்தல் அறிக்கை, அறிவிப்புகளை தொடர்ந்து, அ.தி.மு.க. இந்த அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்