தொகுதி கண்ணோட்டம்: ஆலங்குளம்

புதிதாக உதயமான தென்காசி மாவட்டத்தில் அங்கம் வகித்துள்ள ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி விவசாய பூமி ஆகும். இ்ங்கு பெரும்பாலானோர் விவசாயத்தையே பிரதான தொழிலாக கொண்டு உள்ளனர். இதனால் தொகுதி முழுவதும் பசுமைமயமாக கண்களை குளிர்விக்கிறது.

Update: 2021-03-08 05:38 GMT
பீடி சுற்றும் தொழில்
இந்த தொகுதி அதிக கிராமங்களை உள்ளடக்கியது. இங்கு விவசாயத்தை போல் பீடி சுற்றும் தொழிலும் பிரதானமாக உள்ளது. ஏராளமான பெண்கள் பீடி சுற்றுகின்றனர். பல்லாரி, கத்தரி, வெண்டை, தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் நெல் சாகுபடி நடக்கிறது. இதனால் அரிசி ஆலைகள், காய்கறி சந்தைகள் நிறைந்து காணப்படுகின்றன.ஆலங்குளம் தொகுதியில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 116 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 34 ஆயிரத்து 18 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 7 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 60 ஆயிரத்து 141 வாக்காளர்கள் உள்ளனர்.

வெற்றிவிவரம்
இந்த தொகுதி நெல்லை மாவட்டத்தில் இருந்து இதுவரை 15 சட்டமன்ற தேர்தல்களை சந்தித்து உள்ளது. தென்காசி மாவட்டம் உதயமான பிறகு முதல் முறையாக ‘கன்னி’ தேர்தலை சந்திக்கிறது. இதுவரை நடந்த 15 தேர்தல்களில் அ.தி.மு.க. 4 முறையும் (1977, 1984, 2001, 2011), தி.மு.க. 5 முறையும் (1967, 1971, 1996, 2006, 2016) வெற்றி பெற்று உள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சி 4 முறையும் (1952, 1962, 1989, 1991), காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் ஒரு முறையும், சுயேச்சை ஒரு முறையும் வெற்றி வாகைசூடி உள்ளனர்.கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பூங்கோதை 88 ஆயிரத்து 891 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எப்சி கார்த்திகேயன் 84 ஆயிரத்து 137 வாக்குகள் பெற்றார்.

மாற்றுத்தொழில்
தற்போது மத்திய அரசு பீடி தொழிலுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதனால் பீடி சுற்றும் தொழில் நலிவடைந்து வருகிறது. எனவே, அந்த தொழிலாளர்கள் மாற்றுத்தொழில் செய்வதற்கு அதாவது தையல் தொழில், பால் உற்பத்தி போன்ற சிறு, சிறு தொழில்கள் செய்வதற்கு மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.அதேபோல் விவசாயத்தை பொறுத்தவரையில் பாசன வசதிகள் மிகக்குறைவாக உள்ளது. சிற்றாறு ஓடுகிறது. ஆனால் ஆங்காங்கே ஆக்கிரமிப்புகளால் அந்த பகுதியில் தண்ணீர் வரத்து குறைவாக உள்ளது. அதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. குடிதண்ணீர் பிரச்சினையும் உள்ளது. அதனால் சித்திரை சுவாதி தடுப்பணை கட்டித்தர வேண்டும்.

கொள்முதல் நிலையம்
மேலும், இந்த தொகுதியில் பனை தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் பதனீர், கருப்புக்கட்டி ஆகியவற்றை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்கள். எனவே, அரசு சார்பில் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும். மேலும், ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டம் வெங்கடாம்பட்டி வரை வருகிறது. அந்த குளம் நிரம்பி மறுகால் பாய்ந்துதான் ஆலங்குளம் தாலுகா செல்ல முடியும். 
அதனால் ஜம்புநதி மேல்மட்ட கால்வாயில் இருந்து அவர்களுக்கு தனியாக கால்வாய் வெட்டி ஏற்பாடு செய்து தரவேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தை விவசாய பணிக்கு விரிவுப்படுத்த வேண்டும்.

பாப்பாக்குடி-கடையம் கூட்டு குடிநீர் திட்டம் முழுமை பெறவில்லை. இந்த திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் சுற்றியுள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும். கடையத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்க வேண்டும். இதுதவிர கிராமங்களில் சாலை வசதி, பஸ் வசதி இல்லை. அதனால் கிராமப்புற பகுதிகளில் சீராக பஸ்களை இயக்க வேண்டும் என்று ஏராளமான கோரிக்கைகளை பட்டியலிடுகின்றனர் தொகுதி மக்கள்.

ஆலங்குளம் தொகுதியில் இந்த முறை வெல்லப்போவது யார்? என்பது வருகிற மே மாதம் 2-ந்தேதி தெரியவரும்.

பயோடேட்டா

மொத்த வாக்காளர்கள் - 2,60,141

ஆண்கள் - 1,26,116

பெண்கள் - 1,34,018

மூன்றாம் பாலினத்தவர்கள் - 7

மேலும் செய்திகள்