தொகுதி கண்ணோட்டம்: பெருந்துறை
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சட்டமன்ற தொகுதியாகவும், தொழில் வளர்ச்சி அதிகம் பெற்று வரும் தொகுதியாகவும் இருப்பது பெருந்துறை. தமிழக சட்டமன்ற தொகுதிகள் வரிசையில் 103-வது இடம் பெருந்துறைக்கு உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை தாலுகா, சென்னிமலை ஒன்றிய பகுதியில் சில கிராமங்களும், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றிய பகுதிகளும் பெருந்துறை சட்டசபை தொகுதியில் உள்ளன.
1951-ம் ஆண்டு பெருந்துறை சட்டமன்ற தொகுதி உருவாக்கப்பட்டது. தொடர்ந்து இங்கு தேர்தல்கள் நடந்து வருகின்றன.பெருந்துறை தொகுதியை பொறுத்தவரை கம்யூனிஸ்டு கட்சியினரின் செல்வாக்கு மிகுந்த தொகுதியாக கூறப்படுவது உண்டு. இங்கு இதுவரை நடந்த பொதுத்தேர்தல்களில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றது இல்லை என்பது ஆச்சரியத்தக்க உண்மை. தி.மு.க. கூட்டணி சார்பில் பிற கட்சிகள் வெற்றி பெற்று உள்ளன. ஆனால், தி.மு.க. வேட்பாளர் நேரடியாக இங்கு வெற்றி பெற்றதில்லை. காங்கிரஸ் ஒரு முறை வெற்றி பெற்று இருக்கிறது. அ.தி.மு.க.வும், கம்யூனிஸ்டு கட்சிகளும்
மட்டுமே இங்கு அதிக முறை வெற்றி பெற்று உள்ளன.
இந்த தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.வாக இருப்பவர் முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம். இவர் தொடர்ந்து 2-வது முறையாக இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.பெருந்துறை தொகுதி என்றாலே வறண்ட பகுதி என்பதுதான் அனைவரின் எண்ணங்களிலும் முதலில் தோன்றும். இங்குள்ள பெரும்பாலான பகுதிகள் வறட்சியானவைதான்.
பெருந்துறை சிப்காட் அமைக்கப்பட்ட பின்னர் தொழில் வளர்ச்சி மிக்க பகுதியாக இது வளர்ந்து வருகிறது. ஒரு சில பகுதிகளில் மட்டும் கீழ்பவானி பாசனம் மூலம் விவசாயம் நடக்கிறது. விவசாயம் அதிகமாக கிணற்று பாசனத்தில்தான் உள்ளது. ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பது என்றால் குறைந்த பட்சம் 700 அடிக்கு தோண்ட வேண்டிய நிலை இருந்தது. பெருந்துறை பகுதியும் வளர்ச்சிஅடையாத ஒரு பழைய சிறுநகர் பகுதியாகவே இருந்தது.ஆனால் கடந்த 10 ஆண்டுளாக பெருந்துறை தொகுதி மற்றும் பெருந்துறை நகரின் வளர்ச்சி அபிரிமிதமாக வளர்ந்து உள்ளது என்றால் அது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய விஷயமாக உள்ளது.
திருப்பூர், கோவை மாவட்டங்களில் இருந்து ஈரோடு வருபவர்களுக்கு நுழைவு வாயிலாக இருக்கும் பெருந்துறை தொகுதி பகுதியில் சாலை வசதிகள் நல்ல முறையில் பேணப்பட்டு வருகின்றன. சமீப காலமாக பெருந்துறை நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம், கொடிவேரி குடிநீர் திட்ட பணிகளால் சாலை வசதி சிதிலம் அடைந்து புழுதி பறக்கும் நிலைக்கு உள்ளது. பணிகள் நடைபெறும் இடங்கள் தவிர பிற பகுதிகளில் பொதுமக்கள் பாதிக்கப்படும் அளவுக்கு சாலைகள் இல்லை என்பது ஆறுதலான விஷயம்.அத்திக்கடவு -அவினாசி திட்டத்தால் ஈரோடு மாவட்டத்தில் பயன் பெறும் தொகுதிகளில்
ஒன்றாக பெருந்துறை உள்ளது. இங்கு வறண்ட குளங்கள் பலவும் நீரேற்றம் பெறவும், விவசாயம் செழிக்கவும் வாய்ப்பு உள்ளது.
பெருந்துறை தொகுதி முழுவதுமான குடிநீர் திட்டமாக கொடிவேரி- பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஈரோடு தொகுதியில் குடிநீர் இணைப்பு இல்லாத கிராமங்கள் இல்லை என்ற நிலையும், நிலத்தடி நீரை குடிநீருக்காக உறிஞ்சாமல் பவானி ஆற்று தண்ணீரை பாதுகாக்கப்பட்ட குடிநீராக பெருந்துறை தொகுதி மக்கள் பயன்படுத்தும் நிலையும் ஏற்பட்டு உள்ளது. சிப்காட் மற்றும் சுற்று வட்டார பகுதிகள் தவிர்த்து வானம் பார்த்த பூமியாக கிடக்கும் தரிசு நிலங்களும், சிறு பகுதி பாசன விவசாய நிலமாகவும் உள்ளது. சிப்காட் எந்த அளவுக்கு தொழில் வளர்ச்சியாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு தொழிற்சாலை கழிவுகள் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இது மட்டுமே தீராத பிரச்சினையாக பெருந்துறை தொகுதி மக்களின் தலைவலியாக உள்ளது. புதுப்புது குடியிருப்புகள், நகரங்கள் உருவாக்கம் என்று பெருந்துறை தொகுதி வளர்ச்சி அடைந்து வருகிறது.
பெருந்துறை தொகுதிக்கு உள்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் இணைப்பு சாலைகள் மேம்பாடு, மேம்பாலங்கள் அமைத்தல், பெருந்துறை பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலங்கள் அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் கூடுதலாக தேவை என்பது பெருந்துறை மக்களின் கோரிக்கை. விரைவாக குடிநீர் திட்ட இணைப்புகள் வழங்க வேண்டும். விடுபட்ட வறண்ட குளங்களையும் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பதும் விவசாயிகளின் கோரிக்கை. இவை நிறைவேறி விட்டால் பெருந்துறை தொகுதி வறண்ட நிலம் என்ற பெயரை மறந்து விடும்.
தொழிற்சாலை கழிவுகளை சுத்திகரித்து வெளியேற்றுவதும், நிலத்தடி நீர் மாசு, காற்று மற்றும் விவசாய நிலங்கள் மாசு அடைவதையும் விரைந்து தடுக்க வேண்டியது அத்தியாவசியம்.தற்போதைய வாக்காளர் பட்டியலின் படி பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 398 வாக்காளர்கள் உள்ளனர். யார் அடுத்த சட்டமன்ற உறுப்பினர் என்பது இவர்களின் கையில் உள்ளது.
2016-ம் ஆண்டு தேர்தல் நிலவரம்
மொத்த வாக்குகள்- 2,12,857
பதிவானவை- 1,82,264
தோப்பு என்.டி.வெங்கடாசலம்
(அ.தி.மு.க.) - 80,292 வெற்றி
கே.பி.சாமி என்கிற
பி.மோகனசுந்தரம் (தி.மு.க.) - 67,521
பயோடேட்டா
மொத்த வாக்குகள் ....... 2,27,398
ஆண்கள்...................... 1,10,325
பெண்கள்...................... 1,17,067
3-ம் பாலினத்தவர் .................. 6