தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் நிறைவு; ‘வெற்றி வாய்ப்பு’ குறித்து உதயநிதியிடம் மு.க.ஸ்டாலின் கேள்வி

தி.மு.க.வில் வேட்பாளர் நேர்காணல் நிறைவு பெற்றது. உதயநிதியிடம் வெற்றி வாய்ப்பு குறித்து மு.க.ஸ்டாலின் கேள்வி கேட்டார்.

Update: 2021-03-06 23:47 GMT

வேட்பாளர்கள் நேர்காணல்

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்பியவர்களிடம் இருந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த மாதம் 17-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. மொத்தம் 8 ஆயிரத்து 388 விருப்ப மனுக்கள் வினியோகிக்கப்பட்டன. 7 ஆயிரத்து 967 மனுக்கள் தாக்கல் ஆகின. இதில் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் பெயரில் பல மனுக்கள் அளிக்கப்பட்டன. பெரும்பாலான நிர்வாகிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்திருந்தனர்.

இந்தநிலையில் விருப்ப மனு அளித்தவர்களிடம் வேட்பாளர்கள் நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. மாவட்ட வாரியாக தி.மு.க. நிர்வாகிகள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்கு உதயநிதி

இந்தநிலையில் வேட்பாளர்கள் நேர்காணல் நேற்று நிறைவு பெற்றது. கடைசிநாளான நேற்று திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெற்றது. இதில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்கு தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்பட 4 பேரும், துறைமுகம் தொகுதிக்கு பி.கே.சேகர்பாபு, சைதாப்பேட்டை தொகுதிக்கு மா.சுப்பிரமணியன், விருகம்பாக்கம் தொகுதிக்கு விக்கிரமராஜா மகன் பிரபாகர் ராஜா, கவிஞர் காசிமுத்து மாணிக்கம் உள்ளிட்டோரும், தியாகராய நகர் தொகுதிக்கு மறைந்த தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் மகன் ராஜா, சகோதரர் கருணாநிதி உள்ளிட்டோரும், ஆர்.கே.நகர் தொகுதிக்கு சிம்லா முத்துச்சோழன், ஏ.டி.மணி உள்ளிட்டோரும், பெரம்பூர் தொகுதிக்கு தேவ ஜவஹர் உள்ளிட்டோரும், திருவொற்றியூர் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் சாமியின் சகோதரர் சங்கர் உள்ளிட்டோரும் நேர்காணலில் பங்கேற்றனர்.

உதயநிதி ஸ்டாலினிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுசெயலாளர் துரைமுருகன் நேர்காணலை நடத்தினர். அப்போது அவரிடம் அந்த தொகுதியில் வெற்றிவாய்ப்பு குறித்து அரசியல் ரீதியாக கேள்வி கேட்கப்பட்டதாக தெரிகிறது. கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதிக்கு மு.க.ஸ்டாலினிடம் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொதுசெயலாளர் க.அன்பழகன் ஆகியோர் நேர்காணல் நடத்தினர் என்பது நினைவுக்கூரத்தக்கது.

10-ந்தேதி வேட்பாளர் பட்டியல்

தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. நாளைக்குள் (திங்கட்கிழமை) தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் யார்-யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது இறுதி செய்யப்படும்.

இதற்கிடையே தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வருகிற 10-ந்தேதி வெளியிடப்படும் என்று நேற்று முன்தினம் நடைபெற்ற தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகள்