கொளத்தூர் தொகுதியில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் போட்டியிடுவது உறுதி
கொளத்தூர் தொகுதியில் தி.மு.க தலைவர் முக ஸ்டாலின் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் உச்சபட்ச பரபரப்பில் உள்ளது.
அந்த வகையில் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட அக்கட்சியின் பலர் தங்கள் விருப்பமனு தாக்கல் செய்தனர். அவ்வாறு விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் திமுக தேர்தல் குழு கடந்த 2-ம் தேதி முதல் நடத்தி வந்த நேர்காணல் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவரை தவிர திமுக சார்பில் வேறு யாரும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்யவில்லை. இதன் மூலம் கொளத்தூர் தொகுதியில் முக ஸ்டாலின் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
கடந்த 2011, 2016 சட்டமன்ற தேர்தலில் முக ஸ்டாலின் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.