தேர்தலில் தொகுதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக திமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும் - வைகோ தகவல்

தேர்தலில் தொகுதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக திமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Update: 2021-03-05 07:53 GMT
சென்னை

தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ம.தி.மு.க.வுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க.வின் நிலைப்பாட்டை ஏற்கமுடியவில்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. வுக்கு ஒற்றை இலக்கத்தில் தான் தொகுதிகள் ஒதுக்க முடியும் என்று தி.மு.க. திட்டவட்டமாக கூறிவிட்டது. இதனால், முதல் சுற்று பேச்சுவார்த்தை ம.தி.மு.க.வுக்கு மனக்கசப்பாக அமைந்தது. தி.மு.க. தரப்பில் முன்வைக்கப்பட்ட கருத்துகளை வைகோவிடம் தெரிவித்தனர்.

இந்தநிலையில், தி.மு.க. தரப்பில் இருந்து மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையில், தங்கள் விருப்பம் நிறைவேற்றப்படும் என்ற மனநிலையில் ம.தி.மு.க. குழுவினர் மாலை 5.50 மணியளவில் அண்ணா அறிவாலயம் வந்தனர். தி.மு.க. குழுவினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை 20 நிமிடங்களில் முடிவடைந்தது.

தி.மு.க. தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், 2-ம் சுற்று பேச்சுவார்த்தையும் ம.தி.மு.க.வினருக்கு அதிருப்தியாக அமைந்தது. இதனை ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா நிருபர்களிடம் பேட்டி அளிக்கும் போது உணர முடிந்தது. அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக ம.தி.மு.க. சார்பில் ஒரு எண்ணிக்கையை கடந்த சந்திப்பின்போது தி.மு.க.விடம் தெரிவித்திருந்தோம். இன்று (நேற்று) நடந்த பேச்சுவார்த்தையில், கடந்த முறை எந்த நிலையில் இருந்தார்களோ, அதே நிலையில்தான் இப்போதும் இருக்கிறார்கள். அதனை ஏற்றுக்கொள்ள முடியாத சூழலில் ம.தி.மு.க. இருக்கிறது.

இதுகுறித்து பொதுச்செயலாளர் வைகோவிடம் எடுத்துச்சொல்வோம். அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை முடிவை தி.மு.க. தான் எடுக்க வேண்டும்.

கொள்கை சார்ந்து நிற்கிற ம.தி.மு.க., தி.மு.க.வுடன் இணைந்து என்கிற சிந்தனை ஓட்டத்துடன் தான் இருக்கிறோம். ஆனால், நடைபெற உள்ள தேர்தலில் ம.தி.மு.க. கும்மிடிப்பூண்டியில் இருந்து கன்னியாகுமரி வரை பறந்து விரிந்திருக்கிற ஒரு இயக்கம். அந்த இயக்கத்துக்கான அங்கீகாரத்தை தந்திடுங்கள் என்ற வேண்டுகோளை தான் தி.மு.க.விடம் வைத்திருக்கிறோம். அதனை பரிசீலிப்பதாக சொல்லி இருக்கிறார்கள். எங்கள் தோழர்களோடு சட்டமன்றத்துக்கு செல்ல வேண்டும் என்பது தான், ம.தி.மு.க.வின் இலக்காக இருக்கிறது. அதுதான் வைகோவின் எண்ணம். அதை நோக்கி தான் ம.தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வருவதால், கட்சி நிர்வாகிகளுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவசர ஆலோசனை நடத்தினார்.

சென்னை தாயகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் மதிமுக துணைப் பொதுச்செயலாளா் மல்லை சத்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.சுமார் ஒரு மணி நேரத்திற்கு இந்த ஆலோசனை நடைபெற்றது. 

பின்னர் வைகோ நிருபர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

தொகுதியை இறுதி செய்வது தொடர்பாக திமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும். தொகுதிகளை பங்கிடுவது தொடர்பாக பேச்சுவார்த்தை சென்றுகொண்டுள்ளது. 3-ம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு திமுக இன்னும் அழைக்கவில்லை.விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக கவுரவமாக நடத்தியுள்ளது.  தேர்தலில் 3-வது அணி அமைய வாய்ப்பு குறைவு. கமல்ஹாசன் தலைமையிலான 3வது அணிக்கு மதிமுக செல்ல வாய்ப்பில்லை என கூறினார்.

மேலும் செய்திகள்