தொகுதி கண்ணோட்டம் சீர்காழி

நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் பிரிக்கப்பட்டது. அதன்படி நாகை மாவட்டத்தில் இருந்த 6 சட்டசபை தொகுதிகளில் 3 தொகுதிகளான மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய சட்டசபை தொகுதிகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளன. இதில் சீர்காழி தொகுதி தனித்தொகுதியாகும்.

Update: 2021-03-05 07:02 GMT
நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் பிரிக்கப்பட்டது. அதன்படி நாகை மாவட்டத்தில் இருந்த 6 சட்டசபை தொகுதிகளில் 3 தொகுதிகளான மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய சட்டசபை தொகுதிகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளன. இதில் சீர்காழி தொகுதி தனித்தொகுதியாகும்.

இந்த தொகுதி காவிரி டெல்டா பகுதியில் கடைமடை பகுதியாக விளங்குகிறது. தொகுதி மறு சீரமைப்புக்கு பின்னர், சீர்காழி சட்டசபை தொகுதியில் 24 வார்டுகளை கொண்ட சீர்காழி நகராட்சி, 15 வார்டுகளை கொண்ட வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி, 37 ஊராட்சிகளை கொண்ட சீர்காழி ஊராட்சி ஒன்றியம், 42 ஊராட்சிகளை கொண்ட கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம், 9 ஊராட்சிகளை கொண்ட செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் ஆகியவை உள்ளன.சீர்காழி தொகுதியில், தொகுதி மறுசீரமைப்பில் பூம்புகார் தொகுதியில் இருந்த காத்திருப்பு, நாங்கூர், திருவெண்காடு, மணிகிராமம், செம்பதனிருப்பு, 80 ராதாநல்லூர், ஆலவேலி, நத்தம், பாகசாலை, 75 கொண்டத்தூர், சேமங்கலம் ஆகிய 11 ஊராட்சிகள் இணைக்கப்பட்டன.

சீர்காழி தொகுதி 1952-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த தொகுதி முதலில் பொது தொகுதியாகவும், பின்னர் 1957-ம் ஆண்டு இரட்டைத்தொகுதியாகவும் மாற்றப்பட்டது. பின்னர் 1962-ம் ஆண்டு மீண்டும் பொதுத்தொகுதியாக மாற்றப்பட்டது.இந்த தொகுதியில் இதுவரை 15 முறை தேர்தல்கள் நடந்துள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி 3 முறையும், 6 முறை அ.தி.மு.க.வும், 4 முறை தி.மு.க.வும், 1 முறை இந்திய கம்யூனிஸ்டு கட்சியும், 1 முறை சுயேச்சையும் வெற்றி பெற்றுள்ளன.அதாவது 1952, 1957, 1962-ல் காங்கிரஸ், 1967-ல் சுயேச்சை, 1971-ல் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, 1977, 1989, 1996-ல் தி.மு.க., 1980, 1984, 1991, 2001, 2011, 2016-ல் அ.தி.மு.கவும் வெற்றி பெற்றுள்ளன. தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் சீர்காழி சட்டசபை தொகுதி 160-வது இடத்தை பிடித்துள்ளது.

2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் பாரதியும், தி.மு.க. சார்பில் கிள்ளைரவீந்திரனும் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் பாரதி 76 ஆயிரத்து 487 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கிள்ளைரவீந்திரன் 67 ஆயிரத்து 484 வாக்குகள் பெற்றார்.சீர்காழி சட்டசபை தொகுதியில் முக்கிய தொழிலாக விவசாயம் விளங்குகிறது. மறைந்த திரைப்பட பக்தி பாடகர் சீர்காழி கோவிந்தராஜன், உலக நூலக தந்தை என போற்றப்படும் எஸ்.ஆர்.ரெங்கநாதன், சீர்காழியில் பிறந்து வளர்ந்து உலகெங்கும் தமிழிசையை பரப்பிய தமிழிசை மூவர்களான அருணாச்சல கவிராயர், முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகியோரும் சீர்காழி சட்டமன்ற தொகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். சைவ சமய நெறிகளை பரப்பிய திருஞானசம்பந்தர் அவதரித்த சட்டைநாதர் கோவிலும் இந்த தொகுதியில் உள்ளது.

இதேபோல் நவக்கிரக ஸ்தலமான செவ்வாய்(அங்காரகன்) வைத்தீஸ்வரன் கோவில், புதன் ஸ்தலமான திருவெண்காடு உள்ளிட்ட கோவில்களும் உள்ளன.சீர்காழி தொகுதியில் ஆதிதிராவிடர்கள் மற்றும் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இதற்கு அடுத்தாற்போல் முஸ்லிம்கள், மீனவர், தேவர், யாதவர், செட்டியார் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர்.

சீர்காழி தொகுதியில் புதிதாக கலை அறிவியல் கல்லூரி, கொள்ளிடம் பகுதியில் உடல்நீர் உட்புகாத வகையில் தடுப்பணை கட்டியது, வெள்ளப்பள்ளம் உப்பனாற்றில் கதவணை கட்டும் பணி, சீர்காழி அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டியது, அம்மா மினி கிளினிக் அமைத்தது, உணவு தானிய சேமிப்பு கிடங்கு அமைத்தது, வாரச்சந்தை அமைத்தது, பாலங்கள் கட்டியது, மீன் உலர்தளம், மீன் ஏலக்கூடம் அமைத்தது, பள்ளி கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம், சமுதாய கூடம், சிறு பாலங்கள் அமைத்தல் என பல்வேறு பணிகள் மேறகொள்ளப்பட்டுள்ளன.

சீர்காழி தொகுதியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த பகுதி மக்களின் பெரும் குறையாக உள்ளது. கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தை முழுமையாக விரிவுபடுத்தி செயல்படுத்த வேண்டும். கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடல்நீர் உட்புகால் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த வேண்டும், சீர்காழி நகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய கட்டிடம் அமைத்து தர வேண்டும். சீர்காழியில் பிறந்து வளர்ந்த நூலக தந்தை எஸ்.ஆர்.ரெங்கநாதன் பெயரில் புதிய நூலக கட்டிடம் கட்டித்தர வேண்டும். திருமுல்லைவாசல் மீன்பிடி துறைமுகத்தில் முறையான தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

2016-ம் ஆண்டு சீர்காழி தொகுதியில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 847 வாக்காளர்கள் இருந்தனர். கடந்த 5 ஆண்டுகளில் புதிய வாக்காளர்கள் மற்றும் இடம் பெயர்ந்து வந்தவர்கள் என 11 ஆயிரத்து 804 பேர் அதிகரித்துள்ளனர். எனவே இவர்களது வாக்குகள் வெற்றியை நி்ர்ணயிக்கும் சக்தியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்