தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் 14-ந்தேதி முதல் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்
தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 14-ந்தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். இதற்காக காஞ்சீபுரம், தஞ்சாவூர், கோவை ஆகிய இடங்கள் பரிசீலிக்கப்படுகின்றன.
சென்னை,
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள், விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் மக்கள் சந்திப்பு இயக்கங்கள் நடத்தப்பட்டன. இதில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தற்போது, 6-வது கட்டமாக, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்கியுள்ள மு.க.ஸ்டாலின், வரும் 12-ந்தேதி சேலம் மற்றும் நாமக்கல்லிலும், 13-ந்தேதி திண்டுக்கல் மற்றும் மதுரையிலும் மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.
மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்
இதற்கிடையே, வரும் 7-ந் தேதி திருச்சியில் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல தனது 10 ஆண்டு கால தொலைநோக்கு திட்டத்தையும், லட்சிய பிரகடனத்தையும் வெளியிட இருக்கிறார். அதேபோல், 11-ந் தேதி தி.மு.க. தேர்தல் அறிக்கையையும் அவர் வெளியிடுகிறார்.
இடையில், தி.மு.க. வேட்பாளர் பட்டியலையும் மு.க.ஸ்டாலின் வெளியிட இருக்கிறார். இந்த நிலையில், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில், வரும் 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார்.
பிரசாரம் எங்கிருந்து தொடக்கம்?
தமிழகம் முழுவதும் வேன் மூலம் சூறாவளி பிரசாரம் மேற்கொள்ளும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பிரசாரத்தை எங்கிருந்து தொடங்குவது என்பது இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், காஞ்சீபுரம், தஞ்சாவூர், கோவை ஆகிய 3 ஊரின் பெயர்கள் பரிசீலனையில் இருக்கிறது.
தமிழகத்தில் இப்போதே வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டதால், காலை மற்றும் மாலை வேளைகளில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ளும் வகையில் பயண திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இடைவிடாமல் நடைபெறும் இந்த தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டே அவர் சென்னை திரும்ப இருக்கிறார். சென்னையில் அவர் கடைசியாக பிரசாரம் மேற்கொள்வார் என தெரிகிறது.