திமுக கூட்டணி:விடுதலைச் சிறுத்தைகளுக்கு 6 தொகுதிகள் ; ஆலோசனைக்கூட்டத்தில் ஆறு தொகுதிகளை ஏற்க எதிர்ப்பு
திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு என தகவல் வெளியாகி உள்ளது. இன்று மாலை உடன்பாடு கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.
சென்னை
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், மனிதநேய மக்கள் கட்சிக்கு இரு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளோடு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.
தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் இன்று (வியாழக்கிழமை) பேச்சுவார்த்தை நடக்குமா? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2011 சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 10 இடங்களில் போட்டியிட்டது. இந்தமுறையும் 10 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி விரும்புகிறது.
தி.மு.க.வுடன் நடந்த தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையின்போது, இத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என்று திருமாவளவன் கேட்டுக்கொண்டார். ஆனால் தி.மு.க. கூட்டணியில் இந்த முறை அதிக கட்சிகள் உள்ளதால் அதிகபட்சம் 5 தொகுதிகள் தான் ஒதுக்கமுடியும் என்று தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்கள்.
எனவே முதற்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. ஆனால் அப்போது திருமாவளவன் நிருபர்களிடம் கூறும்போது, தி.மு.க.வுடன் விரைவாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நடத்தி முடிப்போம். 2 நாட்களில் நல்ல தகவல் வரும் என்று கூறியிருந்தார்.
அதன்படி, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினர் நேற்று மாலை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். இதனால் அண்ணா அறிவாலயத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி குழுவினர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் வரவில்லை.
விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் முயற்சியாக இருதரப்பிலும் தொலைபேசி வழியாகவும் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2 பொதுத் தொகுதிகள் 4 தனித் தொகுதிகள் என 6 தொகுதிகள் வழங்க திமுக முன்வந்து உள்ளது இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் உடன்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து, பிற்பகலில் இரு கட்சிகளின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுக்கள் கலந்தாலோசித்த பிறகு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உடன்பாடு எட்டப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் திமுகவுடனான தொகுதிப் பங்கீடு இழுபறி தொடர்பாக இன்று காலை 10 மணிக்கு சென்னை அசோக்நகர் அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். திமுகவுடன் இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் இந்த ஆலோசனை முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தொகுதி பங்கீடு தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் பேச்சால் பரபரப்பு ஏற்பட்டது. ஆறு தொகுதிகளை ஏற்கக்கூடாது என நிர்வாகிகள் வலியுறுத்தினர்.