தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர்கள் செலவு நிர்ணயம்: பூரி-45 ரூபாய், நெய் தோசை-80 ரூபாய் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு
ஒரு செட் பூரி 45 ரூபாய், ஒரு நெய் தோசை 80 ரூபாய் என்ற அளவுக்கு தேர்தல் பிரசாரத்தின்போது வேட்பாளர்கள் பயன்படுத்தும் பொருட்கள், தொண்டர்களுக்கு அளிக்கும் உணவு உள்ளிட்டவற்றுக்கான செலவை தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் சுமுகமாக தேர்தலை நடத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. முக்கியமாக அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் தேர்தல் செலவை கண்காணிப்பதற்கும், பொருட்களுக்கான விலையை நிர்ணயம் செய்வதற்கும் பல்வேறு வழிகாட்டல்களை தேர்தல் ஆணையம் வகுத்தளித்துள்ளது.
வேட்பாளர்கள் பிரசாரத்துக்கு சென்று வரும் வாகனங்களுக்கு ஆகும் செலவு, தொண்டர்களுக்கு கொடுக்கும் பனியன், தொப்பி, டி-சர்ட் விலை, உணவுப்பொருட்கள், சாப்பாடு ஆகியவற்றின் விலை உள்ளிட்டவற்றை நிர்ணயித்து பட்டியலிட்டு உள்ளது.
பூரி, தோசை விலை
இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள பொருட்களின் விலை, நகர்ப்புற பகுதிகளுக்கும், கிராமப்புற பகுதிகளுக்கும் வேறுபடுகின்றன.
நகர்ப்புறத்தில், ஒரு செட் பூரியின் விலை 45 ரூபாய், ஒரு நெய் தோசை விலை 80 ரூபாய், ஒரு மசாலா தோசையின் விலை 80 ரூபாய், சாப்பாட்டின் விலை 75 ரூபாய், பார்சல் சாப்பாடு 85 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கிராமப்பகுதிகளில் இவற்றின் விலை சற்று குறைவாக உள்ளது.
கட்சியினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இந்த உணவுகளை வழங்கினால், அதன் விலை மற்றும் எண்ணிக்கைக்கு ஏற்ப செலவை கணக்கிட்டு, அதை வேட்பாளரின் செலவுக் கணக்கில் இந்திய தேர்தல் ஆணையம் சேர்த்துவிடும். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கான உச்சபட்ச தேர்தல் செலவாக ரூ.30 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மைக் செட் கட்டணம்
அதுபோல மக்களிடையே தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக வாடகைக்கு எடுக்கப்படும் கார், ஆட்டோக்களுக்கான ஒரு நாள் வாடகையை ரூ.7,425, ஒரு ஆம்ப்ளிபையருக்கு ரூ.212, மைக்கிற்கு ரூ.530, ஒலிபெருக்கிக்கு ரூ.636, கை மைக்கிற்கு ரூ.530, ஸ்டாண்ட் மைக்கிற்கு ரூ.530, குழாய் விளக்கிற்கு ரூ.25.20, மின்விசிறிக்கு ரூ.42.40 என கட்டணம் நிர்ணயம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் வேலூர் மாவட்ட தேர்தல் அதிகாரி (கலெக்டர்) வெளியிட்ட தேர்தல் ஆணையத்தின் இந்த பட்டியலில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணங்கள் அதிகமாக இருப்பதாகக் கூறி அவரிடம் சில அரசியல் கட்சியினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும், உணவு மற்றும் பிரசார உபகரணங்கள் தொடர்பான கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.