மார்ச் 7ந் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிட ஏற்பாடு நடைபெற்று வருவதாக தகவல்
மார்ச் 7ந் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிட ஏற்பாடு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெறவுள்ள நிலையில் தி.மு.க. தரப்பில் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கின்றன. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்குவது என நேற்று முன்தினம் முதல் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தி.மு.க.வினர் மேற்கொண்டனர்.
அதில் நேற்று முன்தினம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்தது. இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளும், காங்கிரஸ் கட்சியும் நேற்று பேச்சுவார்த்தைக்கு வந்தன.
காலை 10.05 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தரப்பில் இருந்து மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர்கள் சவுந்தரராஜன், சம்பத், அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த வந்தனர். தி.மு.க. தரப்பில் பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் இருந்தனர்.
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையின் முடிவில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தையை முடித்து வெளியே வந்து, எந்த பதிலும் தெரிவிக்காமல் சென்றுவிட்டனர். இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுத்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அவர்களை தொடர்ந்து காலை 11 மணியளவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தரப்பில் இருந்து மாநில துணை செயலாளர்கள் சுப்பராயன், வீரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் பழனிசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த வந்தனர். பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த நிர்வாகிகள், ‘சுமுகமாக பேச்சுவார்த்தை நடந்தது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை இன்று நடக்க உள்ளது’ என்று தெரிவித்துவிட்டு சென்றனர்.
2 கம்யூனிஸ்டு கட்சிகளும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை தி.மு.க.விடம் கேட்ட நிலையில், தி.மு.க. தரப்பில் இருந்து ஒற்றை இலக்க எண்ணிக்கையிலேயே தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிவித்துவிட்டனர். ஏற்கனவே கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 13 இடங்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 10 இடங்களும் ஒதுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
கம்யூனிஸ்டு கட்சிகளை தொடர்ந்து, நேற்று மாலை 5.15 மணியளவில் காங்கிரஸ் கட்சியினர் தொகுதி பங்கீடு தொடர்பாக 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த வந்தனர். காங்கிரஸ் தரப்பில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் கே.ஆர்.ராமசாமி, ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா உள்பட நிர்வாகிகள் வந்திருந்தனர்.
காங்கிரஸ் கட்சி கடந்த 2006-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 சட்டமன்ற தேர்தல்களில் தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கிறது. அந்தவகையில், ஏற்கனவே நடைபெற்று முடிந்த 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 48 தொகுதிகளும் (34 தொகுதிகளில் வெற்றி), 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 63 இடங்களும் (5 தொகுதிகளில் வெற்றி), 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 41 தொகுதிகளும் (8 தொகுதிகளில் வெற்றி) ஒதுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இன்று (புதன்கிழமை) கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க., வி.சி.க. உடன் பேச்சுவார்த்தை நடக்க இருக்கிறது.
தி.மு.க., கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை வருகிற 5-ந் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) முடித்து இறுதி செய்ய திட்டமிட்டு இருக்கிறது. ஒருவேளை அதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் 6-ந் தேதிக்குள் (சனிக்கிழமை) இறுதி செய்து, 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அதுதொடர்பான அறிவிப்பை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார்.
அது போல் மார்ச் 7ந் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிட ஏற்பாடு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.