சட்டப்பேரவைத் தேர்தல்: தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக மீது மார்க்சிஸ்ட் அதிருப்தி?

சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2021-03-02 07:10 GMT
சென்னை, 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் தொடங்க இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், அரசியல்கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகின்றன.

ஆளுங்கட்சியான அ.தி.மு.க., பா.ம.க.வை கூட்டணியில் இணைத்து கொண்டதுடன், அந்த கட்சிக்கு 23 தொகுதிகளையும் வழங்கியுள்ளது. தொடர்ந்து, பா.ஜ.க., தே.மு.தி.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

எதிர்க்கட்சியான தி.மு.க.வை பொறுத்தவரை, அந்த கூட்டணியில் ஏராளமான கட்சிகள் இருக்கின்றன. முதற்கட்டமாக நேற்று முன்தினம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய 2 கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தி.மு.க. நடத்தியது.

முதல் நாளில் முடிவு எட்டப்படாத நிலையில், நேற்று 2-வது நாளாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்படி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

இந்த சூழலில் சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று அண்ணா அறிவாலத்திற்கு வந்திருந்தனர். அப்போது அவர்கள் தரப்பில் திமுகவிடம் 12 தொகுதிகள் வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் திமுக தரப்பில் 6 இடங்கள் மட்டுமே கொடுக்க முன்வந்ததால், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 6 இடங்கள் மட்டுமே கொடுக்க திமுக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்குப் பின், அண்ணா அறிவாலயத்தில் இருந்து வெளியே வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி சுப்பராயன் செய்தியாளர்களிடம் சந்திப்பின் போது, “தொகுதிப் பங்கீடு தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்