தமிழக கலாசாரத்தை சிறுமைப்படுத்த நினைப்பவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் ராகுல்காந்தி பேச்சு

பா.ஜனதாவை தமிழகத்தில் நுழைய விட்டு விடாதீர்கள் என்றும், தமிழ்மொழி, கலாசாரத்தை சிறுமைப்படுத்த நினைப்பவர்களுக்கு தேர்தல் மூலம் பாடம் கற்பிக்க வேண்டும் எனவும் ராகுல்காந்தி கூறினார்.

Update: 2021-03-02 02:43 GMT
நாகர்கோவில், 

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தென்மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 3-வது நாளாக நேற்று குமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.

கன்னியாகுமரி சர்ச் ரோடு சந்திப்பில் பிரசாரத்தின் போது, பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

மோடி மிரட்டுகிறார்

இரண்டு தகவல்களை உங்களிடம் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். முதலாவதாக டெல்லியில் உள்ள மோடி அரசாங்கம் தமிழ் மொழிக்கோ, தமிழ் கலாசாரத்துக்கோ, தமிழ் நாகரிகத்துக்கோ மதிப்பு கொடுப்பதாக இல்லை. இ்ங்கு இருக்கிற முதல்-அமைச்சர் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறார். தமிழக முதல்-அமைச்சர் மக்களின் கோரிக்கைகளை முன்னிறுத்தாமல் மோடி சொல்வதை செய்பவராக இருப்பது நமக்கு வருத்தமளிக்கிறது. மோடி தொலைக்காட்சியை பார்த்து ரசிக்கிற சூழலில் தான் இருக்கிறார். அவர் தமிழகத்தையும் ஒரு தொலைக்காட்சியை பார்ப்பது போன்று தான் பார்க்கிறார். தொலைக்காட்சி சேனல்களை ரிமோட் கண்ட்ரோல் மூலம் மாற்றுவது போன்று எல்லாவற்றையும் மாற்றலாம் என்று நினைக்கிறார்.

தமிழக முதல்-அமைச்சர் மிகப்பெரிய ஊழல் பேர்வழியாக இருக்கிறார். அவர் ஊழல் செய்ததால் சி.பி.ஐ., வருமான வரித்துறை ஆகியவற்றை வைத்து மோடி மிரட்டி வருகிறார். தமிழர்களை தவிர பிறர் தமிழகத்தில் ஆட்சி செய்ய முயற்சித்தால் அதை தமிழ் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பது வரலாறு. இந்த தேர்தலிலும் அதை நாம் பின்பற்ற வேண்டும். யார் தமிழ் மக்களை உண்மையாக முன்னிலைப்படுத்துகிறாரோ? யார் ஒரு தமிழராக நின்று செயல்படுகிறாரோ? அவர் தான் தமிழகத்தின் முதல்-அமைச்சராக வர வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் உங்களுக்கு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

இந்தியாவுக்கு வழிகாட்டும் மாநிலம்

இரண்டாவதாக ஒன்றை சொல்கிறேன், தமிழகம் இந்தியாவுக்கு வழிகாட்டக்கூடிய ஒரு மாநிலம். பெருந்தலைவர் காமராஜர் தான் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கிய முதல் இந்திய குடிமகன் ஆவார். காமராஜர் முயற்சியால் இன்று தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்த பெருமை காமராஜரையே சாரும். எனவே தான் தமிழகம், இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது என்று சொல்கிறேன்.

இதனால் தமிழகம் தொழில் துறையில், தொழில் உற்பத்தியில் முதன்மையான மாநிலமாக இருக்கிறது. இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது. தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான சிறுகுறு தொழிற்சாலைகள் இருக்கின்றன. அந்த தொழிற்சாலைகள் தான் இங்குள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குகிறது. இந்தியாவின் வளர்ச்சியை மேம்படுத்த நீங்கள் முயற்சி செய்கிறீர்கள்.

பிரதிபலிக்க வேண்டும்

ஆனால் தமிழகத்தின் முதல்-அமைச்சரோ, பிரதமர் முன்பாக தலை குனிந்து காட்சி அளிக்கிறார். முதல்-அமைச்சர் தமிழக மக்களுக்குத்தான் தலை குனிய வேண்டுமே தவிர, மோடிக்கு தலைகுனியக்கூடாது. நாம் எந்த காரணத்தைக்கொண்டும் தமிழ் மொழியை களங்கப்படுத்த முயற்சிக்கும் பா.ஜனதாவை தமிழகத்தில் வழி விட்டு விடக்கூடாது. மோடியும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தமிழ் கலாசாரத்தையும், மொழியையும் சிறுமைப்படுத்த நினைக்கிறார்கள்.

மோடி சொல்கிறார் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே வரலாறு என்று சொல்கிறார். அப்படி சொன்னால் தமிழ், பெங்காலி போன்ற மொழிகள் இந்திய மொழிகள் இல்லையா?. தமிழ் வரலாறு இந்திய வரலாறு இல்லையா? தமிழக கலாசாரம் இந்திய கலாசாரங்களில் ஒன்று இல்லையா?. எனவே இவற்றுக்கு பதில் அளிக்கும் வகையில் நடைபெறக்கூடிய தேர்தலில் பிரதிபலிக்க வேண்டும். அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.

துணை நிற்பேன்

தமிழர்களின் மொழி உணர்வை, கலாசாரத்தை, பண்பாட்டை, வரலாற்றை காப்பாற்ற நான் இருக்கிறேன். அது எனது கடமையாகும். தமிழ் மொழியை மட்டுமல்ல பிற மொழிகளை காப்பாற்ற, பிற கலாசாரத்தை காப்பாற்ற, பிற வரலாற்றை காப்பாற்ற நான் கண்டிப்பாக துணை நிற்பேன்.

இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

தொடர்ந்து குமரியில் பல்வேறு இடங்களில் ராகுல்காந்தி பிரசாரம் மேற்கொண்டார். இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் சஞ்சய்தத், தமிழக மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாணவிகளுடன் நடனம்

முளகுமூடு செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார். அப்போது, மாணவிகளின் விருப்பத்துக்கு இணங்க அவர்களுடன் சேர்ந்து ராகுல்காந்தி நடனமாடினார்.

அப்போது நிர்வாகிகளும் அவருடன் சேர்ந்து நடனமாட அங்கு உற்சாகம் கரை புரண்டது. அதே சமயத்தில், உடல் நலனை பேணுவது குறித்து கேட்ட கேள்விக்கு மாணவியுடன் சேர்ந்து ராகுல்காந்தி தண்டால் எடுத்து அசத்தினார்.

நுங்கு சாப்பிட்ட ராகுல்

கன்னியாகுமரி அருகே கொட்டாரத்தை அடுத்த அச்சன்குளம் பகுதியில் வந்த போது திடீரென வாகனத்தை நிறுத்தச்சொன்ன ராகுல்காந்தி, சாலையோரம் இருந்த ஒரு பெண்ணின் கடைக்குச் சென்று நுங்கு சாப்பிட்டார். முதலில் கரண்டியால் நுங்கு சாப்பிட்ட அவர் பின்னர் கையால் எடுத்து ரசித்து, ருசித்து சாப்பிட்டார். 

மேலும் செய்திகள்