சேலத்தில் அரசு நிலம் தொடர்பான மண்டல ஆய்வுக் கூட்டம்-4 மாவட்ட அதிகாரிகள் பங்கேற்பு

சேலத்தில் அரசு நிலம் தொடர்பான மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நில நிர்வாக ஆணையர் நாகராஜன் தலைமையில் நடந்தது. இதில் 4 மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Update: 2022-06-17 23:15 GMT

சேலத்தில் அரசு நிலம் தொடர்பான மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நில நிர்வாக ஆணையர் நாகராஜன் தலைமையில் நடந்தது. இதில் 4 மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆய்வுக்கூட்டம்

சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கான நிலம் தொடர்பான மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. நில நிர்வாக ஆணையர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் கார்மேகம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நத்தம் நிலங்களில் வசிப்பவர்களுக்கு வழங்கப்பட்ட இணையவழிப் பட்டா மீதான நிலை குறித்தும், குடியிருப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முறைப்படுத்துதல் குறித்தும், விளிம்பு நிலை பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் வீட்டு மனைப்பட்டா செயல்முறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மேலும், பட்டா மாறுதல் கோரி வரும் மனுக்களின் மீது விசாரணை மேற்கொண்டு ஆணை வழங்குதல், கணினி வழிப்பட்டா பிழை திருத்தங்கள் மேற்கொள்வது மற்றும் கிராமப்புறங்களில் சிட்டா, அ-பதிவேடு திருத்தங்கள் உள்ளிட்டவை குறித்து நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் நில நிர்வாக ஆணையர் நாகராஜன் ஆய்வு செய்தார்.

மேலும், நில வகைப்பாடு மாற்றம் குறித்த முன்னேற்பாடு பணிகள், நிலம் தொடர்பான வழக்குகள், நீர்நிலை ஆய்வுகளின் நிலை மற்றும் நீர்நிலைகள் மற்றும் பிற அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் வழங்கிய விவரங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பட்டா மாறுதல் செய்யும் அனைத்து ஆவணங்களையும் நிரந்தர கோப்புகளாக முடித்து, பதிவறையில் பராமரிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் கவிதா, ராஜேஸ்வரி, அனிதா, உதவி கலெக்டர்கள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (நிலம்), தனி தாசில்தார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்