வீரபாண்டி
திருப்பூரில சாப்பிட்ட தட்டை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் தள்ளுவண்டி கடையில் வேலை பார்த்த வாலிபரை அடித்துக்கொன்ற பெயிண்டர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அடித்துக்கொலை
திருப்பூர் கருவம்பாளையம் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் ரகுபதி (வயது 20). பனியன் நிறுவனத்தில் தையல் ெதாழிலாளியாக வேலை பார்த்து வந்தார். மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கே.வி.ஆர். நகர் பகுதியில் இரவு நேரங்களில் தனது சித்தி மகன்கள் நடத்திவந்த தள்ளுவண்டி கடையில் உதவியாக இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் தள்ளுவண்டி கடையில் ரகுபதி பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்போது சாப்பிட 3 பேர் வந்தனர். அவர்கள் சாப்பிட்டு முடித்த பிறகு தட்டுகளை தூரமாக வைத்ததாக தெரிகிறது.
இதையடுத்து அவர்களிடம் தட்டுகளை தள்ளுவண்டியில் வைக்குமாறு ரகுபதி கூறினார். இதனால் 3 பேரும் ஆத்திரம் அடைந்து தகாத வார்த்தையால் பேசி ரகுபதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அந்த ஆசாமிகள் அங்கு கிடந்த கட்டையை எடுத்து ரகுபதியின் தலையில் பலமாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் ரகுபதி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை ரகுபதி உயிரிழந்தார்.
3 பேர் கைது
இது குறித்து திருப்பூர் சென்ட்ரல் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ரகுபதியை கொன்ற கொலையாளிகள் யார்? என்று விசாரித்தனர். விசாரணையில் ரகுபதியை கட்டையால் தாக்கி கொன்றவர்கள் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் தேவேந்திரன் (34), சரவணன் (37), முத்து (28) என தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் மதுபோதையில் ரகுபதியை அடித்து ெகான்று இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தள்ளுவண்டி கடையில் பணிபுரிந்த வரை கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
----
Reporter : R. Balasubramanian Location : Tirupur - Veerapandi