திருத்தணி அருகே ஷேர் ஆட்டோ மோதி வாலிபர் பலி
திருத்தணி அருகே ஷேர் ஆட்டோ மோதி வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.;
வாலிபர் பலி
திருத்தணி ஒன்றியம் அலமேலுமங்காபுரம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு சாலையோரம் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த ஷேர் ஆட்டோ அதிவேகமாக வந்து நடந்து சென்று கொண்டிருந்த நபர் மீது மோதியது. இதில் தலையில் படுகாயம் அடைந்த நபர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து அலமேலுமங்காபுரம் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய ஷேர் ஆட்டோ ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
திருத்தணி வாரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 55). இவர், தனது நண்பரான சுப்பிரமணியுடன் (55) வேலை நிமிர்த்தமாக கே.ஜி. கண்டிகை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இ.என்.கண்டிகை அருகே சென்று கொண்டிருந்தபோது, அதே திசையில் வந்த ஆட்டோ கிருஷ்ணமூர்த்தி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் கிருஷ்ணமூர்த்தி, சுப்பிரமணி ஆகிய இருவருக்கும் படுகாயமடைந்தனர். இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கிருஷ்ணமூர்த்தியின் மகன் வினோத் குமார் அளித்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.