தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

ஊட்டியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-07 18:45 GMT

ஊட்டி 

ஊட்டியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தொடர் திருட்டு

நீலகிரி மாவட்டம் ஊட்டி எட்டின்ஸ் பகுதியில் தனியார் கியாஸ் குடோன் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த குடோனின் கதவை உடைத்து ரூ.2½ லட்சத்தை மர்ம நபர் திருடி சென்றார். இதேபோல் கேத்தி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து, ரூ.2½ லட்சம் திருடு போனது. இதுகுறித்த புகாரின் பேரில் ஊட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் 2 திருட்டு சம்பவங்களிலும் ஒரே நபர் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு நீலகிரியில் போலீசார் தங்கும் விடுதிகள் மற்றும் காட்டேஜ்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஊட்டி மத்திய போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மணிக்குமார் தலைமையிலான போலீசார் பஸ் நிலைய பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் சோதனை மேற்கொண்டனர்.

வாலிபர் கைது

அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர் ஒருவர் தங்கி இருந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த மகாராஜா (வயது 27) என்பதும், கியாஸ் குடோன் மற்றும் கேத்தி பகுதியில் பணம் திருடியதும் தெரியவந்தது. மேலும் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்து உள்ளார்.

பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் மகாராஜா மீது திருட்டு, கொலை முயற்சி, ஆபாசமாக பேசுதல் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் கடந்த வாரம் நெல்லையில் திருடி விட்டு, ஊட்டி விடுதியில் தங்கி இருந்த அவரிடம் இருந்து ரூ.1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து மகாராஜாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை ஊட்டி ஜூடிசியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்