குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு
சுரண்டை அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் இறந்தார்.
சுரண்டை:
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராம்ஜி சாபே. இவர் கடந்த 5 ஆண்டுகளாக குடும்பத்துடன் செங்கோட்டையில் தங்கியிருந்து வேதபாடசாலை நடத்தி வருகிறார். இவரது மகன் முகேஷ்குமார் (வயது 16). இவர் தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் காலையில் சுந்தரபாண்டியபுரம் கிராமத்திற்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்தார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு நண்பர்களுடன் சுந்தரபாண்டியபுரம் குளத்தில் குளித்ததாக தெரிகிறது. அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்ற முகேஷ்குமார் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி இறந்தார். தகவல் அறிந்ததும் சாம்பவர்வடகரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசி விசுவநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். முகேஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.