காஞ்சிக்கோவில் அருகே 24 பவுன் நகை, பணம் திருடிய வாலிபர் கைது
காஞ்சிக்கோவில் அருகே 24 பவுன் நகை-ரூ.20 ஆயிரம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
பெருந்துறை
காஞ்சிக்கோவில் அருகே 24 பவுன் நகை-ரூ.20 ஆயிரம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
24 பவுன் நகை திருட்டு
காஞ்சிக்கோவில் அருகே உள்ள எல்லீஸ் பேட்டையை சேர்ந்தவர் சாமியப்பன் (வயது 70). விவசாயி. இவருடைய மனைவி சரஸ்வதி (65). கடந்த மாதம் 5-ந் தேதி கணவன், மனைவி இருவரும் வெளியூர் சென்றிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவையும் உடைத்து 24 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றுவிட்டார்.
இதுகுறித்து காஞ்சிக்கோவில் போலீசில் சாமியப்பன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் காஞ்சிக்கோவில் போலீசார் நசியனூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்தது. சந்தேகத்தின்பேரில் போலீசார் காரை நிறுத்தி, அதை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தினர்.
சிறையில் அடைப்பு
விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவர் சேலம் மாவட்டம் நாழிக்கல்பட்டியை சேர்ந்த சிலுவை என்கிற கவுதம் (28) என்பதும், அவர்தான் சாமியப்பன் வீட்டில் புகுந்து 24 பவுன் தங்க நகைகளையும், ரூ.20 ஆயிரத்தையும் திருடி சென்றது என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கவுதமை கைது செய்தனர். அவரிடமிருந்து 4 பவுன் தங்க நகையையும், அவர் ஓட்டி வந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அங்குள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.