டாஸ்மாக் ஊழியரை மதுபாட்டிலால் குத்திய வாலிபர் சிக்கினார்
வேடசந்தூர் அருகே டாஸ்மாக் ஊழியரை மதுபாட்டிலால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
குஜிலியம்பாறை அருகே உள்ள மல்லபுரத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45). இவர், வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் கடைக்கு வந்த வாலிபர் ஒருவர், ஓசியில் மதுபாட்டில் கேட்டார். அப்போது முருகேசன் தரமறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், மதுபாட்டிலை உடைத்து முருகேசனை குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில், படுகாயம் அடைந்த முருகேசன், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பிஓடிய வாலிபரை வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் அந்த வாலிபர், மாரம்பாடியை அடுத்த நாயக்கனூரில் உள்ள ஒரு தோட்டத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று வாலிபரை சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில், அவர் மாரம்பாடியை அடுத்த பெரியகுளத்துபட்டியை சேர்ந்த அருண்குமார் (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அருண்குமார் மீது ஏற்கனவே சொத்து பிரச்சினையில் தனது பெரியப்பாவை கொலை செய்ததாக ஒரு வழக்கும், மேலும் 4 கொலை முயற்சி வழக்குகளும் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.