காதலியின் நகையை மீட்க பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

காதலியின் நகையை மீட்க பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2024-08-11 05:28 GMT

கும்பகோணம்,

கும்பகோணத்தில் அதிகமாக பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருட்டுப்போனது. குறிப்பாக கண்காணிப்பு கேமரா இல்லாத பகுதிகளை குறி வைத்து மோட்டார் சைக்கிள் திருடி செல்லும் சம்பவம் தொடர்ந்து நடந்து வந்தது. மோட்டார் சைக்கிள்கள் திருடு போனது குறித்து கும்பகோணம் போலீசாருக்கு புகார் வந்தது.

இதையடுத்து கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்திவாசன் உத்தரவின்பேரில், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ.செந்தில்குமார் மற்றும் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகள் அளித்த தகவலின் படி நாச்சியார்கோவில் போலீஸ் சரகம் அம்மன்குடி, புத்தகரம் தெற்கு தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் மணிகண்டன் (வயது28) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கும்பகோணத்தில் பல்வேறு இடங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் மணிகண்டனை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான 8 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

மணிகண்டனிடம் நடத்திய விசாரணையில், அவரது காதலியின் அடகு வைத்த நகையை மீட்பதற்காக மோட்டார் சைக்கிள்களை திருடியதாகவும், இதுவரை 8 மோட்டார் சைக்கிள்களை திருடியுள்ளதாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்