2 பேரை உருட்டுக்கட்டையால் தாக்கிய வாலிபர் கைது

மயிலாடுதுறையில் நாயை தாக்கியதை தட்டிக்கேட்ட 2 பேரை உருட்டுக் கட்டையால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-07 18:45 GMT

மயிலாடுதுறையில் நாயை தாக்கியதை தட்டிக்கேட்ட 2 பேரை உருட்டுக் கட்டையால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நாய்குரைக்கும் சத்தம்

மயிலாடுதுறை திருவிழந்தூர் கவரத் தெருவை சேர்ந்தவர் பரமசிவம் மகன் அய்யப்பன் (வயது 28). இவர் சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு ஒரு மணி அளவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு அய்யப்பனும், பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது சித்தப்பா கிருஷ்ணராஜும் வீட்டின் வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்போது திருவிழந்தூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த குமார் மகன் பிரவீன் (19) என்பவர் நாயை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளார். இதுகுறித்து அய்யப்பன் ஏன் நாயை தாக்குகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

உருட்டுக்கட்டையால் தாக்குதல்

அதற்கு அவர், நான் போகும்போதும், வரும்போதும் எதற்காக இந்த நாய் குறைக்கிறது. அதனால் தான் நாயை தாக்குகிறேன் என்று கூறியதால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த பிரவீன், அய்யப்பனையும், கிருஷ்ணராஜையும் உருட்டு கட்டையால் தாக்கினார்.

இதில் காயமடைந்த 2 பேரும் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கைது

இதுகுறித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபஸ்ரீ மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்