குரோம்பேட்டையில் காதல் திருமணம் செய்த இளம்பெண் மாயம்; 2 குழந்தைகளுடன் கணவர் பரிதவிப்பு
காதல் திருமணம் செய்த இளம்பெண் திடீரென மாயமானார். இதனால் 2 குழந்தைகளுடன் அவருடைய கணவர் பரிதவித்து வருகிறார்.;
காதல் திருமணம்
சென்னையை அடுத்த குரோம்பேட்டை நியூ காலனி 7-வது மெயின் ரோட்டில் வசித்து வருபவர் விநாயகமூர்த்தி. இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள சீயமங்கலம் ஆகும். இவர், தன்னுடைய உறவுக்காரரின் மகளான சிந்து (வயது 26) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெயதுர்கா (6½) என்ற மகளும், புஷ்பராஜ் (3½) என்ற மகனும் உள்ளனர்.
விநாயகமூர்த்தி எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலை பார்த்து வந்தார். காலையில் வேலைக்கு சென்றுவிட்டு இரவுதான் வீடு திரும்புவார். சிந்து, தினமும் காலையில் தனது மகன், மகளை பள்ளியில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்து வீட்டு வேலைகளை கவனித்து வந்தார். திருமணமாகி 7 ஆண்டுகள் ஆன நிலையில் 2 குழந்தைகளுடன் கணவன்-மனைவி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
இளம்பெண் மாயம்
கடந்த 18-ந் தேதி வழக்கம் போல் சிந்து, தனது மகன், மகள் இருவரையும் அருகில் உள்ள பள்ளியில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தார். ஆனால் அதன்பிறகு அவர் மாயமாகிவிட்டார். அவர் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. அவரது செல்போனும் 'சுவிட்ச்ஆப்' செய்யப்பட்டு இருந்தது.
அக்கம் பக்கத்திலும், உறவினர்களின் வீடுகளிலும் என பல இடங்களில் தேடியும் மனைவியை காணாததால் அதிர்ச்சி அடைந்த விநாயகமூர்த்தி, தனது காதல் மனைவி மாயமானது குறித்து குரோம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிந்துவை தேடி வருகிறார்கள்.
2 குழந்தைகளுடன் பரிதவிப்பு
மனைவி எங்கு சென்றார்? என்பது தெரியாமல் தனது 2 குழந்தைகளுடன் விநாயகமூர்த்தி பரிதவித்து வருகிறார். மனைவியின் செல்போன் எண்ணுக்கு 'வாட்ஸ் அப்' மூலம் விநாயகமூர்த்தியும், குழந்தைகளும் 'வாய்ஸ் மெசேஜ' அனுப்பியும் சிந்துவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
இதனால் மனைவியை தேடி, தனது குழந்தைகளுடன் விநாயகமூர்த்தி பல்வேறு இடங்களுக்கு அலைந்து கொண்டிருக்கிறார். மாயமான தனது மனைவியை போலீசார் எப்படியாவது கண்டுபிடித்து தரவேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
சிந்துவின் செல்போன் 'சுவிட்ச்ஆப்' செய்யப்பட்டு இருப்பதால் அவர் எங்கு இருக்கிறார்? என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியாக அவரது செல்போனில் யாரெல்லாம் தொடர்பு கொண்டார்கள்? என்பது குறித்த விவரங்களை சேகரித்து வரும் போலீசார், மாயமான சிந்துவையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.