போலீஸ் நிலையத்துக்கு கையெழுத்து போட சென்ற வாலிபர் மர்மச்சாவு - கன்னியாகுமரியில் பரபரப்பு...!
குலசேகரத்தில் போலீஸ் நிலையத்துக்கு கையெழுத்து போட சென்ற வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குலசேகரம்,
வாலிபர் மர்மச்சாவு
குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள பொன்மனை குற்றியான் விளையைச் சேர்ந்தவர் சசிகுமார். இவருடைய மகன் அஜித் (வயது23). ஐ.டி.ஐ. படித்துவிட்டு டெம்போ டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டின் அருகே உள்ள ஒருவரிடன் தகராறில் ஈடுபட்டதால் குலசேகரம் போலீசார், அஜித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
2 மாதங்கள் சிறையில் இருந்த நிலையில் 17 -ந் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்தநிலையில் கடந்த 23-ந் தேதி காலையில் அஜித் தனது தாயிடம் போலீஸ் நிலையத்தில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்து போட வேண்டுமென்று கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். அன்றைய தினம் அவர் திடீரென்று ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலையில் பரிதாபமாக இறந்தார்.
போலீசார் மீது புகார்
இந்த நிலையில் அஜித்தின் தந்தை சசிகுமார், தனது மகனை குலசேகரம் போலீசார் தாக்கி அவனுக்கு விஷம் கொடுத்ததாக சந்தேகம் உள்ளதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்தின் உத்தரவின் பேரில் தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் குலசேகரம் போலீஸ் நிலையம் வந்து போலீசாரிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். மேலும் அஜித்தின் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
தொடர்ந்து போலீஸ் நிலையம் மற்றும் அதற்கு வெளியே உள்ள கண்காணிப்புக் கேமராக்களின் பதிவுகள் கைப்பற்றப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டன.
உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
இந்தநிலையில் நேற்று காலையில் அஜித்தின் உடல் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது உடலில் காயங்கள் ஏதாவது உள்ளனவா என்று புகைப் படங்களும் எடுக்கப்பட்டன. தொடர்ந்து பிற்பகல் 2.30 மணியளவில் அஜித்தின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.