திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மர்ம சாவு

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மர்ம சாவு

Update: 2022-06-24 13:07 GMT

தாராபுரம்

தாராபுரம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்தார். அவருடைய உடலை வாங்க மறுத்து உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து ேபாலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

இளம்பெண்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்டடம் பெல்லம்பட்டியைச் சேர்ந்தவர் கோபால் மகள் ரம்யா (வயது 23). இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ரம்யாவுக்கு பெற்றோர் திருமணம் செய்து ைவக்க முடிவு செய்தனர். அதன்படி குண்டடம் பனப்பாளையம் பகுதியை சேர்ந்த பெரியசாமி என்கிற சின்ராஜை (25) மணமகனாக தேர்வு செய்தனர். இவர் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வேலை பார்த்து வருகிறார். அதன் பின்னர் இரு வீட்டாரும் ரம்யா-சின்ராஜ் திருமணத்தை அடுத்த மாதம் 13-ந்தேதி நடத்த நாள் குறித்தனர்.

அதைத் தொடர்ந்து திருமண அழைப்பிதழ் அச்சடித்து கொடுக்க தொடங்கினர். நேற்று முன்தினம் திருமண அழைப்பிதழ் கொடுக்க பெண்ணின் பெற்றோர் வெளியூர் சென்று விட்டனர்.

தூக்கில் தொங்கினார்

இதனால் ரம்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில் மணமகன் பெரியசாமி ரம்யாவை பார்க்க பெல்லம்பட்டி வந்தார். பின்னர் வீட்டில் ரம்யாவும், பெரியசாமியும் தனிமையில் பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பின்பு பெரியசாமி அங்கிருந்து சென்று விட்டார். இதற்கிடையில் திருமண அழைப்பிதழ் கொடுக்க வெளியூர் சென்றிருந்த கோபால், மகள் ரம்யாவை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் செல்போன் நீண்டநேரம் ஒலித்தும் செல்போனை எடுத்து ரம்யா பேசவில்லை. இதையடுத்து அருகில் உள்ளவர்களை கோபால் ெதாடர்பு கொண்டு தனது மகளை பார்த்து வரும்படி கூறினார். உடனே பக்கத்து வீட்டுக்காரர்கள் கோபால் வீட்டிற்கு சென்று பலமுறை ரம்யாவை அழைத்தும் வீட்டிற்குள் இருந்து பதில் ஏதும் வரவில்லை. இதையடுத்து ஜன்னலை திறந்து பார்த்தனர்.

அப்போது ரம்யா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் ரம்யாவை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ரம்யாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிறகு ரம்யா உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சாலை மறியல்

மகள் திடீரென்று இறந்ததை அறிந்த ரம்யாவின் பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். பிறகு மணமகன் பெரியசாமி மீது கோபால் குண்டடம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ரம்யாவின் உடலை வாங்க மறுத்து பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு தனராசு மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ரம்யாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும், எனவே பெரியசாமியை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்த பின்பு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் மர்மமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்