புத்தகம் படித்தால் அறிவை வளர்த்துக் கொள்ளலாம்
செல்போனில் இருந்து விடுபட்டு புத்தகம் படித்தால் அறிவை வளர்த்துக் கொள்ளலாம் என மயிலாடுதுறையில் நடந்த புத்தக கண்காட்சி தொடக்க விழாவில் கலெக்டர் லலிதா பேசினார்.
ெசல்போனில் இருந்து விடுபட்டு புத்தகம் படித்தால் அறிவை வளர்த்துக் கொள்ளலாம் என மயிலாடுதுறையில் நடந்த புத்தக கண்காட்சி தொடக்க விழாவில் கலெக்டர் லலிதா பேசினார்.
புத்தக கண்காட்சி தொடக்க விழா
மயிலாடுதுறை திருவிழந்தூர் ஏ.வி.சி. திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தக கண்காட்சி தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கி புத்தக கண்காட்சியை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். எம்.எல். ஏ.க்கள் நிவேதா முருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் வரவேற்றார்.
விழாவில் கலெக்டர் லலிதா பேசியதாவது:-
அறிவை வளர்த்து கொள்ளலாம்
புத்தகம் வாசிப்பு என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கு பெரிதும் உதவும். இன்றைய காலகட்டத்தில் செல்போன், டி.வி. உள்ளிட்டவை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி மனதை சஞ்சலப் படுத்தி வரும் நிலையில் புத்தகம் படித்தால் அதிலிருந்து விடுபட்டு அறிவை வளர்த்துக் கொள்ளலாம்.
உங்கள் பார்வையை விசாலமாக்கிக் கொள்ளலாம். மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகலாம். புத்தக வாசிப்பு குறைந்து வருவதை கருத்தில் கொண்டுதான் ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தக கண்காட்சி நடத்த வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் உள்ளன
அதன்படி மயிலாடுதுறையில் இன்று(அதாவது நேற்று)புத்தக கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு எல்.கே.ஜி. மாணவர்கள் முதல் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர்கள் வரை அனைவருக்கும் தேவையான அனைத்து புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன. இதனை மாணவர்கள் மற்றும் மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் ஒன்றியக்குழு தலைவர்கள் காமாட்சிமூர்த்தி, கமல்ஜோதி தேவேந்திரன், மகேந்திரன், ஜெய பிரகாஷ், நகரசபை தலைவர் துர்கா பரமேஸ்வரி மற்றும் உள்ளாட்சி துறை பிரதிநிதிகள் மாவட்ட அளவிலான அலுவலர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை இணை இயக்குனர் முருகண்ணன் நன்றி கூறினார்.