ஏற்காட்டில் கோடை விழா நாளை தொடங்குகிறது: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்-5 லட்சம் கொய் மலர்கள் மூலம் அலங்காரம்

ஏற்காட்டில் கோடை விழா நாளை தொடங்குவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளது. விழாவில் 5 லட்சம் கொய் மலர்களால் அலங்காரம் செய்யப்படுகிறது.

Update: 2023-05-19 22:17 GMT

ஏற்காடு:

கோடை விழா-மலர் கண்காட்சி

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் ஒவ்வொரு ஆண்டும் மே இறுதி வாரம் அல்லது ஜூன் முதல் வாரத்தில் கோடை விழா, மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கோடை விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி, 8 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் வழக்கம் போல் பல்வேறு விதமான போட்டிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தோட்டக்கலைத்துறை சார்பில் அண்ணா பூங்காவில் சுமார் 10 ஆயிரம் தொட்டியில் சால்வியா, ஜிணியா, கிரை சந்தமம், எஸ்தர், பெட்டுனியா, மெரி கோல்டு, ஆஸ்தம், டேலியா, லில்லியம், கோழிக்கொண்டை, ஆர்கிட் உள்பட 30-க்கும் மேற்பட்ட மலர் வகைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

5 லட்சம் கொய் மலர்கள்

மேலும் ஊட்டியில் இருந்து கொண்டு வரப்பட்ட லில்லி மலர் செடிகள் தற்போது பூத்து குலுங்குகின்றன. கொல்கத்தாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள டேலியா செடிகள், சுற்றுலா பயணிகளின் கண்களை கவரும் வகையில் சூரியன் போல் பிரகாசமாக காட்சிப்படுத்தப்பட உள்ளது. 5 லட்சம் கொய் மலர்களை கொண்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான இறுதி கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.

மேலும் மலர்களால் ஆன பொன்னியின் செல்வன் கப்பல், டிராகன், ரோபோ, கங்காரு, டோரா, டைனோசர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்கள் அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளில் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறப்பான ஏற்பாடு

செடிகளின் வளர்ச்சி மற்றும் பூக்கள் அதிகமாக பூப்பதற்கு அதிக வெளிச்சம் தேவைப்படுவதால் கூடாரம் அமைத்து, 24 மணி நேரமும் மின் விளக்குகள் எரியவிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஏற்காடு கோடை விழா, மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை கண்டு ரசிக்க அதிகபடியான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு வருவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்