உலக மகளிர் தினத்தையொட்டி மாமல்லபுரம் புராதன சின்னங்களை கட்டணமின்றி கண்டுகளித்த சுற்றுலா பயணிகள்
உலக மகளிர் தினத்தையொட்டி மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி கண்டுகளித்தனர்.;
பார்த்து ரசித்தனர்
மகளிர் தினத்தையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் வெண்ணெய் உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்களை நேற்று ஒரு நாள் மட்டும் சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டுகளிக்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்திருந்தது.
இதையடுத்து சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து குடும்பம், குடும்பமாக வந்திருந்த சுற்றுலா பயணிகள் நேற்று புராதன சின்னங்களை கட்டணமின்றி பார்த்து ரசித்தனர்.
நுழைவு கட்டண மையங்கள்
இலவச அனுமதியையொட்டி கடற்கரை கோவில், வெண்ணெய் உருண்டைக்கல், ஐந்துரதம், கிருஷ்ணமண்டபம் போன்ற இடங்களில் உள்ள நுழைவு கட்டண மையங்கள் மூடப்பட்டு இருந்தன. குறிப்பாக சில பயணிகள் நேற்று இலவச அனுமதி என தெரியாமல் நுழைவு சீட்டு மையங்களுக்கு சென்றனர்.
அங்கு நுழைவு கட்டண மையம் மூடப்பட்டு இருந்ததை கண்டனர். அப்போது அங்கு இருந்த தொல்லியல் துறை பணியாளா்கள் சிலர், சுற்றுலா பயணிகளிடம் மகளிர் தினத்தையொட்டி இலவச அனுமதியால் நுழைவு கட்டணம் மையம் மூடப்பட்டது என்றும், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நீங்கள் கட்டணமின்றி புராதன சின்னங்களை பார்த்து ரசிக்கலாம் என்று அறிவுறுத்தினர். பின்னர் கூட்டம், கூட்டமாக வந்த ஆண்கள், பெண்கள், சுற்றுலா பயணிகள் பலர் புராதன சின்னங்களை சுற்றி பார்த்துவிட்டு சென்றதை காண முடிந்தது.
சுற்றுலா வந்த பயணிகள் இலவச அனுமதி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் தொல்லியல் துறை சார்பில் கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணெய் உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களின் நுழைவு வாயில் பகுதியில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. குறிப்பாக, மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டு ரசிக்க உள்நாட்டு பயணிகளுக்கு ஒரு நபருக்கு ரூ.40-ம், வெளிநாட்டு பயணிக்கு ரூ.600-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.