கல்வி விழிப்புணர்வு, மருத்துவ முகாம் நடத்த ஆய்வுக்கூட்டம்

மாற்றுத்திறனுள்ள குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வு, மருத்துவ முகாம் நடத்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

Update: 2023-10-10 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை இணைந்து மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடத்த உள்ளது. இதற்கான ஆய்வுக்கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் 2023-24-ம் கல்வியாண்டின் கணக்கெடுப்பில் 18 வயதுக்குட்பட்ட 3,697 மாற்றுத்திறன் மாணவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இம்மாணவர்கள் அனைவருக்காகவும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பாக 13 ஒன்றியங்களில் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் 18.10.2023 முதல் 17.11.2023 வரை ஒரு நாளைக்கு ஒரு முகாம் வீதம் ஒன்றியம் வாரியாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒரே கட்டமாக முகாம் நடத்தப்பட்டு மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு தேவையான தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள், கல்வி உதவித்தொகை, இலவச பஸ், ரெயில் பயண அட்டை, அறுவை சிகிச்சை தேவைப்படும் மாணவர்களை கண்டறிதல், ஏற்கனவே மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெற்று காலக்கெடு முடிவடைந்த அட்டைகளை புதுப்பிக்க வேண்டிய குழந்தைகளும் முகாமில் கலந்துகொள்ளலாம் என்றார்.

இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்