மீண்டும் பணி வழங்க கோரி தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

மீண்டும் பணி வழங்க கோரி தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Update: 2022-09-14 09:24 GMT

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கார் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை சில ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒரு நிறுவனத்திற்கு கைமாறியது. புதிய நிர்வாகத்தினர் அந்த தொழிற்சாலை அமைய நிலம் கொடுத்த தொழிலாளர்கள் 178 பேரை வேலையில் இருந்து நீக்கினார்கள். பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்ககோரி குடும்பத்தினருடன் தொழிற்சலையை முற்றுகை, பூட்டு போடும் போராட்டம், சாலை மறியல் போராட்டம், உண்ணாவிரத போராட்டம், மனு கொடுக்கும் போராட்டம் என தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். இருப்பினும் தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தினர் யாரையும் பணியில் அமர்த்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் நேற்று முன்தினம் தங்கள் குடும்பத்தினருடன் தொழிற்சாலையை முற்றுகையிட்டு அந்த தொழிற்சாலையின் நுழைவாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் திருவள்ளூர் தாசில்தார் மதியழகன், திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் அவர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர். இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று அந்த தனியார் தொழிற்சாலை முன்பு பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி குடும்பத்தினருடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.எஸ்.கண்ணன், ஏ.ஐ.டி.யூ.சி திருவள்ளூர் மாவட்ட தலைவர் கஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் சரவணன் உள்பட தொழிலாளர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்