புதிய ஆட்டோ ஸ்டாண்ட் அமைக்க தொழிலாளர்கள் எதிர்ப்பு

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே புதிய ஆட்டோ ஸ்டாண்ட் அமைக்க ஆட்டோ தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து குறைதீர்வு கூட்டத்தில் மனு அளித்தனர்.

Update: 2023-03-06 18:31 GMT

மக்கள் குறைதீர்வு கூட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர்.

பெறப்பட்ட 408 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

அண்ணா ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் ஆட்டோ டிரைவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

வேலூர் புதிய பஸ் நிலையம் செல்லியம்மன் கோவில் நுழைவு வாயில் அருகே அண்ணா ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் என்ற பெயரில் முறையாக பதிவு செய்து ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தோம். இதில் 120 டிரைவர்கள் ஆட்டோ ஒட்டி வருகிறோம். தொழிற்சங்க விதிமுறைகளை மீறி எங்களின் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே இன்னொரு ஸ்டாண்ட் வைத்தனர். நாங்கள் புகார் தெரிவிக்கவே அதற்கான அறிவிப்பு பலகை அகற்றப்பட்டது.

மேலும் அந்த நபர்கள் சிலருடன் சேர்ந்துக்கொண்டு புதிதாக போர்டு வைத்து ஆட்டோ ஸ்டாண்ட் உருவாக்க முயற்சி செய்கிறார்கள். இதனால் 120 ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்.

புதிய பஸ் நிலையத்தில் எங்களுக்கு இடம் ஒதுக்கி தருமாறு கோரிக்கை மனு அளிக்கப்பட்டு அதற்கு பதில் கடிதமும் பெற்றுள்ளோம்.

வீடு வேண்டும்

தொல்லை கொடுக்கும் நபர்களை கண்டித்து எங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். அதன்படி அங்கு வேறு ஒரு ஆட்டோ ஸ்டாண்ட் வைக்க அனுமதி வழங்கக் கூடாது.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

பள்ளிகொண்டா பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் பா.ஜ.க. மகளிர் அணி மாவட்ட தலைவர் செல்வி தலைமையில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் அனைவரும் கூலி வேலை செய்து வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக வீடோ, வீட்டுமனைகளோ, நிலமோ எதுவும் இல்லை. நாங்கள் மிகவும் வறுமையில் தவித்து வருகிறோம். வீடுகள் கட்டமுடியாத சூழல் உள்ளது. எனவே எங்களுக்கு குடிசை மாற்று வாரியத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை ஒதுக்கித்தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தனஞ்செயன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்