ஆள்மாறாட்டத்தில் தொழிலாளி கொலை செய்யப்பட்டது அம்பலம்
காதலியின் தந்தைக்கு பதில் ஆள்மாறாட்டத்தில் வீடு புகுந்து தொழிலாளியை படுகொலை செய்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
மதுரை,
தொழிலாளி கொலை
மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, மோதிலால் தெரு, யோகானந்தசுவாமி மடம் பகுதியை சேர்ந்தவர் பொங்குடி (வயது 65). இவர் தனியார் மில் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பாண்டியம்மாள். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அதில் இருவருக்கும் திருமணமாகி மகன் ஊட்டியில் ராணுவத்திலும், மகள் அண்ணாநகர் பகுதியிலும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
கணவன், மனைவி இருவர் மட்டும் அங்கு சொந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் மதியம் பொங்குடி வீட்டில் சேரில் அமர்ந்தபடி டி.வி. பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று வீட்டிற்குள் 2 வாலிபர்கள் புகுந்தனர். அவர்கள் பொங்குடி சேரில் அமர்ந்தபடியை சரமாரியாக அரிவாள், கத்தி ஆகிய ஆயுதத்தால் கண்இமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். பின்னர் அவர்கள் தப்பி சென்று விட்டனர். இது குறித்து கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
2 வாலிபர்கள் கைது
அதில் பொங்குடியை கொலை செய்தவர்கள் யார், எதற்காக அவரை கொலை செய்தனர்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் காளவாசல் எச்.எம்.எஸ்.காலனி, ஆனந்தம் நகரை சேர்ந்த முத்தமிழன் (19), அவரது நண்பர் கோச்சடையை சேர்ந்த அருணாசலம் (19) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரித்தனர்.
அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல் கிடைத்தது. கொலை செய்யப்பட்ட பொங்குடியின் வீட்டின் அருகே வசித்து வரும் பெண் ஒருவரை முத்தமிழன் காதலித்து வந்தார். அதை அறிந்த அந்த பெண்ணின் தந்தை அவரை சத்தம் போட்டு கண்டித்துள்ளார். அதில் ஆத்திரமடைந்த முத்தமிழன் பெண்ணின் தந்தையை கொலை செய்ய திட்டமிட்டார்.
ஆள்மாறி கொலை
அதன்படி நேற்று முன்தினம் மதியம் தனது நண்பர் அருணாசலத்தை அனுப்பி அந்த பெண்ணின் தந்தை இருக்கிறாரா? என்று பார்த்து வருமாறு கூறியுள்ளார். அவனும் அங்குள்ள ஒரு வீட்டின் கதவை தட்டி இது மோதிலால் தெரு என்று கேட்ட போது பொங்குடியின் மனைவி இல்லை என்று பதில் கூறியுள்ளார். பின்னர் அருணாசலம் அங்கிருந்து சென்று முத்தமிழனிடம் பெண்ணின் தந்தை வீட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதை தொடர்ந்து அவர்கள் இருவரும் சென்று வீட்டில் இருந்த பொங்குடியை சரமாரியாக கொலை செய்துள்ளனர். பின்னர் விசாரித்த போது வீடு மாறி பெண்ணின் தந்தைக்கு பதில் பொங்குடியை அவர்கள் கொலை செய்தனர் என்று விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.