சிவகாசி,
சாத்தூர் அமீர்பாளையத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 31). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா (21). சாத்தூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் மனைவி மஞ்சுளா பணி முடிந்து வீட்டிற்கு வர வேண்டும் என செல்போனில் ஜெயராஜிடம் கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து தனது மனைவியை அழைத்து வர ஜெயராஜ் மோட்டார் சைக்கிளில் மதுரை பஸ் நிறுத்தம் அருகில் வந்த போது பின்னால் வந்த அரசு பஸ், ஜெயராஜ் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் நிலைத்தடுமாறி ஜெயராஜ் பஸ்சின் முன்பகுதியில் விழுந்துள்ளார். ஜெயராஜ் மீது முன்பக்க சக்கரம் ஏறியதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மஞ்சுளா கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான அரசு பஸ்சை ஓட்டி வந்த கோவில்பட்டி அருகே உள்ள மூப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.