கிணறு தோண்டும் பணியின்போது கல் சரிந்து விழுந்து தொழிலாளி பலி

சங்கரன்கோவில் அருகே கிணறு தோண்டும் பணியின்போது கல் சரிந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-05-23 18:45 GMT

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வென்றிலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபத்திரன் மகன் முருகன், விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றை ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிது. இந்த பணியில் தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாம்பட்டியை சேர்ந்த மஞ்சுநாதன் (வயது 24), கிருஷ்ணகிரியை சேர்ந்த மாரிமுத்து, வேலு ஆகியோர் நேற்று முன்தினம் ஈடுபட்டு இருந்தனர்.

அவர்கள் 3 பேரும் கிணற்றில் இறங்கி சரள் அள்ளும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பக்கவாட்டு சுவரில் இருந்து கல் ஒன்று சரிந்து விழுந்ததில், மஞ்சுநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வேலு காயம் அடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் வேலுவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சின்னகோவிலான்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மஞ்சுநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து மஞ்சுநாதன் மனைவி சரண்யா சின்னகோவிலான்குளம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் முருகன், வீரசிகாமணியை சேர்ந்த ரத்தினசாமி மகன் சண்முகராஜ், மாரியப்பன் மகன் மனோஜ்குமார் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிணறு தோண்டும் பணியின்போது பக்கவாட்டு சுவரில் இருந்து கல் விழுந்து தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Tags:    

மேலும் செய்திகள்