வழிப்பறி வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை
வழிப்பறி வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
சேலம் அம்மாப்பேட்டை ராஜகணபதி தெருவை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் மாதவன் (வயது 32). இவர், கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9-ந் தேதி அழகாபுரம் பகுதியில் சூடாமணி மருத்துவமனை அருகில் நடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக வந்த கோரிமேடு ஆத்துக்காடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (30) என்பவர் மாதவனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.450-ஐ வழிப்பறி செய்தார். இதுகுறித்து அவர் அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் 2-வது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு நேற்று நீதிபதி வேடியப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழிப்பறியில் ஈடுபட்ட செந்தில்குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.