திருவள்ளூர் அருகே தொழிலாளி வெட்டிக்கொலை
திருவள்ளூர் அருகே தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
தொழிலாளி
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு அண்ணா நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 38). கூலித்தொழிலாளி நேற்று முருகேசன் வேப்பம்பட்டு அண்ணா நகர் முதல் தெருவை சேர்ந்த தனது நண்பரான தேவா (வயது 53) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து கொண்டு திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அவர்கள் திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு அயத்தூர் டன்லப் நகர் சாலையில் வந்து கொண்டிருந்தார்.
வெட்டிக்கொலை
அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து தாங்கள் வைத்திருந்த கத்தியால் முருகேசனின் தலை, வலது கை- இடது கை போன்ற இடங்களில் சரமாரியாக வெட்டினார்கள்.
இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இதை கண்ட அந்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பினார்கள்.
இது குறித்து செவ்வாபேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் விசாரணை
போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை நடந்த இடத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
முருகேசனின் உடலை மீட்ட செவ்வாபேட்டை போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா என போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.