அடுப்பில் சிலிண்டரை பொருத்தியபோது கியாஸ் கசிந்ததில் மூச்சுத்திணறி ஊழியர் சாவு

அடுப்பில் சிலிண்டரை பொருத்தியபோது கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஊழியர் பலியானார். மேலும் மயங்கி விழுந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2023-03-06 20:51 GMT

குன்னூர்,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருவங்காட்டில் உள்ள காரக்கொரை கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (வயது 54). அங்குள்ள வங்கியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி அனுசுயா.

இந்த நிலையில் காரக்கொரை கிராமத்தில் பாரம்பரிய திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோபாலின் வீட்டுக்கு எடப்பள்ளியில் இருந்து அவரது அக்காள் கண்ணம்மாள் (58) வந்திருந்தார். அவர், நேற்று காலையில் சமையல் வேலையில் ஈடுபட்டார். அப்போது திடீரென சிலிண்டரில் இருந்த கியாஸ் தீர்ந்து விட்டது. உடனே வீட்டில் இருந்த மற்றொரு கியாஸ் சிலிண்டரை எடுத்து அடுப்பில் பொருத்த முடிவு செய்தார். இதற்காக பக்கத்து வீட்டை சேர்ந்தவரும், கியாஸ் நிறுவனத்தில் எழுத்தராக (கிளார்க்) பணியாற்றி வந்தவருமான நடராஜ் (53) என்பவரை அழைத்தார்.

மயங்கி விழுந்தனர்

இதையடுத்து அங்கு வந்த அவர், கியாஸ் சிலிண்டரை அடுப்பில் பொருத்தினார். அப்போது திடீரென கியாஸ் கசிவு ஏற்பட்டது. தொடர்ந்து சிலிண்டரில் தீப்பற்றி எரிந்தது. மேலும் வீடு முழுவதும் கியாஸ் பரவி புகை மண்டலமாக காட்சி அளித்தது. உடனே கோபாலும், அனுசுயாவும் குளியல் அறைக்குள் சென்று பதுங்கி கொண்டனர். நடராஜனும், கண்ணம்மாளும் கியாஸ் கசிவை தடுக்க முயற்சி செய்தனர்.

ஆனால் மூச்சு திணறல் ஏற்பட்டு, அவர்கள் 2 பேரும் சமையல் அறையிலேயே மயங்கி விழுந்தனர். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அருவங்காடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், வீட்டுக்குள் சென்று உள்ளே இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

பரிதாப சாவு

இதைத்தொடர்ந்து கோபால், அனுசுயா ஆகியோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். பின்னர் சமையல் அறையில் மயங்கி கிடந்த நடராஜ், கண்ணம்மாள் ஆகியோரை மீட்டு அருவங்காடு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே நடராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

முதலுதவி சிகிச்சைக்கு பிறகு கண்ணம்மாள் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக சிலிண்டரில் பற்றிய தீ அணைக்கப்பட்டு, கசிவு சரி செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்