மனைவியை கத்தியால் குத்திக்கொன்று விட்டு தொழிலாளி தற்கொலை
மனைவியை கத்தியால் குத்திக்கொன்று விட்டு தொழிலாளி தற்கொலை
அன்னூர்
கோவை அருகே மனைவியை கத்தியால் குத்திக்கொன்று விட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கூலித்தொழிலாளி
கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 32). கூலித்தொழிலாளி. இவருக்கும், அன்னூரை அடுத்த பொன்னைய கவுண்டன்புதூரை சேர்ந்த சூரியா (30) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
சந்தோசுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதனால் அவர் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து உள்ளார். மேலும் அவர், தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
தாய் வீட்டுக்கு சென்றார்
இதுபோல் நேற்று முன்தினம்கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் சூரியா கோபித்துக் கொண்டு தனது குழந்தைக ளுடன் தனது தாய் வீடான பொன்னையகவுண்டன்புதூருக்கு சென்றார்.
இந்த நிலையில் நேற்று மாலை 3.30 மணியளவில் சந்தோஷ் தனது மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வருவதற்காக அங்கு சென்றார். அங்கு சூரியாவின் தாயார் கடைக்கு சென்று விட்டார். குழந்தைகள் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்தனர். சூரியா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
மனைவியை கொன்றார்
அவரிடம் சென்று தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு சந்தோஷ் அழைத்ததாக தெரிகிறது. அப்போது கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து சூரியாவின் கழுத்து பகுதியில் குத்தினார்.
அதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்த சந்தோஷ், தான் செய்த செயலை எண்ணி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர், மனைவி யை கத்தியால் குத்திக்கொன்றுவிட்டோமே என்று அழுது புலம்பி உள்ளார்.
தொழிலாளி தற்கொலை
இதையடுத்து அவர், அங்கு கிடந்த சேலையை எடுத்து மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தாயும், தந்தையும் இறந்து கிடப்பதை பார்த்து குழந்தைகள் கதறி அழுதனர்.
இது குறித்த தகவலின் பேரில் அன்னூர் போலீசார் விரைந்து சென்று சந்தோஷ், சூரியா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பாிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்பத்தகராறு காரணமாக மனைவியை கத்தியால்குத்தி கொலை செய்த தொழிலாளி தானும் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.