கடப்பாரையால் தாக்கி தொழிலாளி கொடூர கொலை
கன்னியாகுமரி அருகே கடப்பாரையால் தாக்கி மரம் வெட்டும் தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர்.;
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே கடப்பாரையால் தாக்கி மரம் வெட்டும் தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தொழிலாளி
கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் அச்சன்குளம் ஓடைத் தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், விவசாயி. இவருடைய மனைவி ராஜாத்தி. இவர்களுக்கு அரவிந்த் ராஜா (வயது 24), சுரேஷ் ராஜா (22) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் பட்டப்படிப்பு முடித்திருந்த சுரேஷ் ராஜா தற்போது மரம் வெட்டும் தொழிலுக்கு சென்று வந்தார்.
இந்தநிலையில் சுரேஷ் ராஜா சிலருடன் மது குடித்து விட்டு நள்ளிரவு வீட்டுக்கு புறப்பட்டார்.
மங்கம்மாள் சாலையில் வந்த போது, அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த செந்தில்குமார் மகன் சாம்சன் மனோ (19) என்பவர் வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
கொலை
இதனால் அவர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு அங்கேயே கைகலப்பாக மாறியது. அந்த சமயத்தில் மதுபோதையில் இருந்த சுரேஷ்ராஜா அருகில் உள்ள கால்வாயில் தவறி விழுந்து உள்ளார். பின்னர் சாம்சன் மனோ, கடப்பாரையால் சுரேஷ் ராஜாவின் தலையில் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த சுரேஷ்ராஜா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சுரேஷ் ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கைது
மேலும் இதுதொடர்பாக கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சாம்சன் மனோவை கைது செய்தனர். சுரேஷ் ராஜா அடுத்த மாதம் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில், கடப்பாரையால் தாக்கி அவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.