புதுக்கோட்டையில் தொழிலாளி அடித்துக்கொலை

புதுக்கோட்டையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை அடித்துக்கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-04 16:36 GMT

நண்பர்கள்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், கீழாநிலைகோட்டை அருகே நம்பூரணிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 52). கூலித்தொழிலாளி. கீழாநிலைகோட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வம் (57). எலக்ட்ரீசியன். இருவரும் நண்பர்கள்.

செல்வத்தின் செல்போனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாலிங்கம் எடுத்து சென்று விட்டதாகவும், அதன் பின்னர் அவரை தேடிச்சென்று செல்வம் அவரிடம் இருந்து செல்போனை வாங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று மதியம் செல்வம், மகாலிங்கம் இருவரும் வம்பரம்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தினர்.

அடித்துக் கொலை

அப்போது இருவருக்கும் இடையே செல்போன் தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் டாஸ்மாக் கடையில் இருந்து வெளியே வந்தனர். பின்னர் வம்பரம்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

இதில் ஆத்திரமடைந்த செல்வம் தனது கைகளால் மகாலிங்கத்தை தாக்கியுள்ளார். இதில் மகாலிங்கம் கீழே சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் செல்வம் அங்கிருந்து சென்று விட்டார்.

கைது

இதுகுறித்து தகவல் அறிந்த கே.புதுப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மகாலிங்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்