கழிஞ்சூர், தாராபடவேடு ஏரிகளை சுற்றுலா தலமாக்கும் பணிகள் தீவிரம்

தீவுகள், நடைபாதைகள் உள்ளிட்ட அம்சங்களுடன் கழிஞ்சூர், தாராபடவேடு ஏரிகளை சுற்றுலா தலமாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2023-02-15 11:59 GMT

தீவு போன்ற அமைப்பு

வேலூர் காட்பாடியில் உள்ள கழிஞ்சூர் மற்றும் தாராபடவேடு ஆகிய ஏரிகள் நகரின் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்கிறது. காட்பாடியில் பொழுதுபோக்கு சுற்றுலா தலம் ஏதும் இல்லாததால் இந்த ஏரிகளை பொழுதுபோக்கு சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 2 ஏரிகளிலும் நடுவில் தீவு போன்ற நிலப்பகுதியை உருவாக்கி பல்வேறு அம்சங்களுடன் சுற்றுலா தலமாக்குவதற்கான நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக ரூ.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏரியில் உள்ள நீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. மேலும் ஏரியின் உள்ளே சில இடங்களில் தூர்வாரும் பணியும் நடந்து வருகிறது.

சுற்றுலா தலமாக

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கழிஞ்சூர் ஏரி, தாராபடவேடு ஏரி ஆகிய ஏரிகளை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஏரிகளை சுற்றி சுற்றுச்சுவருடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட உள்ளது. காலை மற்றும் மாலை வேளையில் நடைபயிற்சி மேற்கொள்ள வசதியாக இது அமைக்கப்படும். மின்விளக்கு வசதி, ஏரியை முழுவதும் பார்க்க வியூ பாயிண்ட் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்படுகிறது. முதல்கட்டமாக நடுவில் தீவு போன்ற பகுதியை அமைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். எனவே நிலத்தடி நீர் மட்டம் குறையாத வகையில் ஏரியின் நீரை வெளியேற்றி வருகிறோம். குறிப்பிட்ட அளவு நீர் வெளியேறியதும் அடுத்தக்கட்ட பணிகள் நடக்கும். ஏரியின் உள்ளே உள்ள செடி, கொடி, முள்மரங்கள் அகற்றப்பட உள்ளது.

தற்போது ஏரிக்கரைகளில் உள்ள செடி, கொடி, மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. நடுவில் தீவு போன்ற பகுதியில் மரங்கள், செடிகள் வளர்க்கப்படும். பறவை இனங்கள் தங்குவதற்கு ஏதுவாக இந்த மரங்கள் வளர்க்கப்பட உள்ளது. பணிகள் முடிக்கப்பட்ட பின்னர் மழைநீர் தேக்கி வைக்கப்படும். இதையடுத்து படகு சவாரியும் கொண்டுவருவதற்கான திட்டமும் உள்ளது. அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதத்தில் பணிகள் முடிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்