4 வழிச்சாலை விரிவாக்க பணி தீவிரம்
தர்மபுரி-திருவண்ணாமலை இடையே 4 வழிச்சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தர்மபுரி-திருவண்ணாமலை இடையே 4 வழிச்சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
4 வழிச்சாலை
தர்மபுரி திருவண்ணாமலை இடையே ரூ.410 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரூ.313.50 கோடி மதிப்பீட்டில் தர்மபுரி-அரூர் வழி மொரப்பூர் சாலை வரை இருவழிப்பாதையில் இருந்து 4 வழிப்பாதையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்தல், ரூ.96.50 கோடியில் அரூர் வழி தாணிப்பாடி -திருவண்ணாமலை சாலை வரை இருவழி பாதையில் இருந்து 4 வழிப்பாதையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
தர்மபுரி-திருவண்ணாமலை 113 கிலோ மீட்டர் தூரம் ஆகும். இதில் தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் 73 கிலோ மீட்டர் தூரம் இந்த சாலை அமைக்கப்படுகிறது. தர்மபுரி-அரூர் வழி மொரப்பூர் சாலை மதிகோன்பாளையம் அருகே 4 வழிச்சாலை விரிவாக்கப்பணிகள் தொடங்கியது. முதல் கட்டமாக தற்போது மதிகோன்பாளையம்-சோலைக்கொட்டாய் வரை சாலை விரிவாக்க பணிகள் நடக்கிறது. இதற்காக சாலையின் ஓரத்தில் உள்ள மரங்கள் வெட்டும் பணியும் நடக்கிறது.
இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
99 சிறு பாலங்கள்
தர்மபுரி-திருவண்ணாமலை இடையே 113 கிலோ மீட்டர் தூரத்திற்கு 4 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இதில் தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் 73 கிலோ மீட்டர் தூரம் இந்தசாலை அமைக்கப்படுகிறது. தற்போது சாலையின் அகலம் 7 மீட்டராக உள்ளது. இது 16.20 மீட்டர் அகலமுள்ள 4 வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. இச்சாலையில் திருவண்ணாமலை -அரூர் வழி தானிப்பாடி சாலையில் 29 சிறுபாலங்களும், தர்மபுரி-அரூர் வழி மொரப்பூர் சாலையில் 70 சிறுபாலங்களும் என மொத்தம் 99 சிறு பாலங்கள் கட்டப்பட உள்ளது. குடியிருப்பு பகுதியில் இருபக்கங்களிலும் மழைநீர் தேங்காத வகையில் வடிகால் வசதி செய்யப்பட உள்ளது.
இந்த சாலையில் பாதுகாப்பு நலன் கருதி 1.20 மீட்டர் அகலம் உள்ள மைய தடுப்பு சுவர் அமைக்கபட உள்ளது. இச்சாலையிலுள்ள திருவண்ணாமலை அரூர் (வழி) தானிப்பாடி சாலையில் 6 இடங்களிலும், தர்மபுரி-அரூர் (வழி) மொரப்பூர் சாலையில் 52 இடங்களில் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு சாலை சந்திப்பு மேம்பாடு செய்யப்பட உள்ளது. மக்களின் நலன் கருதி திருவண்ணாமலை அரூர் (வழி) தானிப்பாடி சாலையில் 6 இடங்களிலும், தர்மபுரி-அரூர் (வழி) மொரப்பூர் சாலையில் 36 இடங்களிலும் பஸ் நிறுத்தம் கட்டப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.