பள்ளிகளுக்கு இலவச பாடப்புத்தகம் அனுப்பும் பணி தொடங்கியது
கோவையில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவச பாடப்புத்தகம் அனுப்பும் பணி தொடங்கி உள்ளது.;
கோவை,
கோவையில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவச பாடப்புத்தகம் அனுப்பும் பணி தொடங்கி உள்ளது.
பாடப்புத்தகங்கள்
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து வருகிற 13-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதையடுத்து பள்ளிகளை சுத்தம் செய்ய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதை தொடர்ந்து பல இடங்களில் பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு அந்தந்த பள்ளிகள் சார்பில் இலவசமாக சமச்சீர் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். இதற்காக கோவை ராமநாதபுரத்தில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள புத்தக காப்பு மையத்தில் இருந்து அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது.
அனுப்பி வைக்கும் பணி
இதற்காக சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் அங்கு வந்து தங்கள் பள்ளிகளில் படித்து வரும் மாணவ-மாணவிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் பாடப்புத்தகங்களை பெற்றனர். பின்னர் அவற்றை வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பள்ளிகள் தொடங்கும் போது மாணவ மாணவிகளுக்கு புத்தகம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள 80 பள்ளிகளில் படித்து வரும் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகளுக்கு விலையில்லா புத்தகம் தமிழக அரசு கல்வித் துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
80 பள்ளிகள்
அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள கன்னார்பாளையம், பரளி, பவர்ஹவுஸ், தோலம்பாளையம், அசோகபுரம், கவுண்டம்பாளையம், கணுவாய், பெத்திகுட்டை, பன்னிமடை, சீலியூர், புலியகுளம், வடகோவை, மணி நகர், சங்கர் நகர், ஆனைக்கட்டி உள்பட கோவை மாவட்டத்தில் உள்ள 80-க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் மற்றும் அரசு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இந்த வாரத்துக்குள் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் கொண்டு செல்லப்பட்டு விடும். அதன் பிறகு பள்ளிகள் திறந்ததும், சம்பந்தப்பட்ட பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்குவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.