தம்மம்பட்டி பகுதியில் மரச்சிற்ப கலைக்கிராமம்

தம்மம்பட்டி பகுதியில் மரச்சிற்ப கலைக்கிராமம் அமைக்கப்பட உள்ளது என்று முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் கூறினார்.

Update: 2022-06-26 20:05 GMT

தம்மம்பட்டி:

தம்மம்பட்டி பகுதியில் மரச்சிற்ப கலைக்கிராமம் அமைக்கப்பட உள்ளது என்று முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் கூறினார்.

மரச்சிற்ப கலைக்கிராமம்

சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் மரச்சிற்பக்கலை கிராமம் அமைப்பது குறித்து கைத்தறி துணிநூல் மற்றும் கதர் துறை அரசு முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப், தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குனர் ஷோபனா, கலெக்டர் கார்மேகம் ஆகியோர் காந்தி நகர் பகுதியில் ஆய்வு நடத்தினர். இதுகுறித்து முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் கூறியதாவது:-

தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கெங்கவல்லி, உலிபுரம், நாகியம்பட்டி, கொண்டயம்பள்ளி மற்றும் அதையொட்டி கிராமங்களை உள்ளடக்கிய குழுவில் 300 கைவினைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பகுதிகளில் மரச்சிற்ப கைவினைக் கிராமம் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு ரூ.1 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள், மேம்படுத்தப்பட்ட கருவிகள், பாதுகாப்பு உபகரணங்கள், சாலைகள், தெரு விளக்குகள், உற்பத்திக் கூடம், விற்பனை காட்சியகம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

வங்கிக்கடன்

மரச்சிற்பங்கள் உற்பத்தியில் ஈடுபடும் பல குடும்பங்கள் மிகவும் ஏழ்மையான நிலையில் குடிசைகள் அமைத்து தொழில் செய்து வருகிறார்கள். இவர்களை ஒன்றிணைத்து மரச்சிற்பங்கள் செய்யவும், அதனை விற்பனை செய்யவும் ஒரு சிறப்பு ஏற்பாடாக தம்மம்பட்டி பகுதியில் மரச்சிற்ப கலைக்கிராமம் அமைக்கப்பட உள்ளது. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தகுதியான இடத்தில் நிலம் ஒதுக்கீடு செய்தும், அவர்களது பணியிடத்துக்காக பிரத்யேகமாக கலையம்சத்துடன் கூடிய குடில்கள் அமைத்தும், இத்தொழிலை நவீன முறையில் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சிற்பங்களை வாங்க வருபவர்கள் சிற்பங்களைத் தேர்வு செய்து ஒரே இடத்தில் வாங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது சிற்பங்களை வாங்க நினைக்கும் வெளி மாநிலத்தவர் மற்றும் வெளி நாட்டவர் எளிதாக வாங்கி செல்ல வழிவகுக்கும். இதனால் சிற்பங்களுக்கு கூடுதல் விலையும் கிடைக்கும். வங்கி கடன் பெற ஏற்பாடுகள் செய்து தரப்படும்.

நடவடிக்கை

தம்மம்பட்டி கிராமத்தில் உள்ள மரச்சிற்பங்கள் மிகவும் பிரசித்தி பெற்றுள்ளதால் மரச்சிற்பங்கள் செய்வதற்கும், அதனை விற்பனை செய்வதற்கும், இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் சேலம் தம்மம்பட்டி மரச்சிற்ப கலைக் கிராமம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வில் உதவி கலெக்டர் சரண்யா, கைவினை வளர்ச்சிக் கழக முதுநிலை உதவி இயக்குனர் தனராஜன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவக்குமார், தாசில்தார் வெங்கடேசன், தம்மம்பட்டி பேரூராட்சி தலைவர் கவிதா ராஜா மற்றும் மரசிற்ப கலைஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்