பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு: வாச்சாத்தி கிராமத்தில் ஐகோர்ட்டு நீதிபதி நேரில் ஆய்வு

பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வேல்முருகன் வாச்சாத்தி கிராமத்தில் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2023-03-04 22:21 GMT

பாலியல் வன்கொடுமை

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே வாச்சாத்தி கிராமம் உள்ளது. இங்கு பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். கடந்த 1992-ம் ஆண்டு ஜூன் மாதம் 20-ந் தேதி இந்த கிராமத்தில் சந்தன மரங்கள் வெட்டப்பட்டு, கடத்தலுக்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி வனத்துறையினர், போலீசார் மற்றும் வருவாய் துறையினர் திடீர் சோதனை நடத்தினார்கள்.

அப்போது 90 பெண்கள் உள்பட 133 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 18 இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், வீடுகள் சூறையாடப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

சி.பி.ஐ. விசாரணை

இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தக்கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தன.. இதையடுத்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் தென் மண்டல ஆணையர் பாமதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு வாச்சாத்தி கிராமத்தில் நேரடி விசாரணை நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து வாச்சாத்தி சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணை அடிப்படையில் வனத்துறையினர், போலீசார், வருவாய்த்துறையினர் என மொத்தம் 269 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேல் முறையீடு

தர்மபுரி மாவட்ட அமர்வு கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையின் போதே புகாருக்கு ஆளான 54 பேர் இறந்துவிட்டனர். இந்தநிலையில் வழக்கு விசாரணை முடிந்து கடந்த 2011-ம் ஆண்டு இந்த வழக்கில் புகாருக்கு ஆளான அனைவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி மொத்தம் 215 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இதில் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கு உள்ளான 17 பேரில் 12 பேருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு ஒரு ஆண்டு முதல் 3 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை பெற்றவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

நீதிபதி நேரில் ஆய்வு

இந்த மேல்முறையீட்டு மனுவை ஐகோர்ட்டு நீதிபதி வேல்முருகன் விசாரணை செய்து வருகிறார். இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆய்வு செய்வதற்காக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வேல்முருகன் நேற்று வாச்சாத்தி கிராமத்திற்கு சென்றார். தர்மபுரி மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி, மாவட்ட கலெக்டர் சாந்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம், மண்டல வன அலுவலர் பெரியசாமி ஆகியோர் உடன் சென்றனர்.

அங்கு வாச்சாத்தி சம்பவம் நடந்தபோது கிராம மக்கள் மறைந்திருந்ததாக கூறப்படும் மலை அடிவாரப்பகுதி, விசாரணைக்குழு பெண்களிடம் விசாரணை நடத்திய பள்ளி, ஏரிக்கரை பகுதி ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து வாச்சாத்தி கிராமத்தில் குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதிக்கு அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அந்த பகுதியில் உள்ள கோவில் வளாகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வாச்சாத்தி கிராம மக்களை சந்தித்து பேசினார். சுமார் 3 மணி நேரம் வாச்சாத்தி கிராமத்தில் ஆய்வு நடத்திய ஐகோர்ட்டு நீதிபதி வேல்முருகன் மதியம் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்