முந்திரியில் ரூ.3½ லட்சம் லாபம் ஈட்டிய மகளிர் சுயஉதவிக்குழுவினர்

முந்திரியில் ரூ.3½ லட்சம் லாபத்தை மகளிர் சுயஉதவிக்குழுவினர் ஈட்டினர்.

Update: 2022-11-28 20:16 GMT

மகளிர் சுய உதவிக்குழு

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக பல்வேறுத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு மகளிர் திட்டத்தின் மூலம் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள 5,783 மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சேர்ந்த 70,000 உறுப்பினர்களுக்கு மகளிர் திட்டத்தின் சார்பில் சமுதாய முதலீட்டு நிதி, சுழல் நிதி, பொருளாதாரக் கடன், வங்கி கடன் இணைப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம், குவாகம் கிராமத்தைச் சேர்ந்த இருளர், தாமரை மற்றும் செம்பருத்தி ஆகிய 3 மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பழங்குடியினர் குழு முந்திரி தோட்டத்தினை பராமரித்து முந்திரியினை அறுவடை செய்யும் உரிமையினை பெறுவது குறித்து தமிழ்நாடு வனத்துறையின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு வனத் தோட்டக்கழகத்தை சி.தர்மதுரை என்பவர் மூலம் அனுகினார்கள். முந்திரி அறுவடையினை தமிழகம் முழுவதும் ஆன்லைன் டெண்டர் மூலம் மட்டுமே குத்தகை வழங்க முடியும் என்று தமிழக வனத் துறையினரால் தெரிவிக்கப்பட்டது.

ஆன்லைன் ஏலம்

மேலும், தமிழ்நாடு வனத்துறையினரால் நடத்தப்படும் பொது ஏலத்தில் பங்கேற்பதற்கு 4.50 லட்சம் செலுத்த பழங்குடியினர் குழு மக்களிடம் போதுமான பணம் வசதி இல்லாத கராணத்தினால் பழங்குடியினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிடம் சென்று ஏலத்தில் இருந்து எங்களுக்கு விலக்கு அளிக்கவும் முந்திரி தோட்டத்தினை பராமரித்து முந்திரியினை அறுவடை செய்யும் உரிமைகளை பெறுவதற்கு செலுத்தவும் கேட்டுக்கொண்டார்கள்.

பழங்குடி உறுப்பினர்களின் தொடர் முயற்சியால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று எடுக்கப்பட்ட முயற்சியின் பேரில் ஆதிதிராவிட நலத்துறை செலுத்துவதற்கு பழங்குடியினர் குழுவிற்கு சிறப்பு நிதியாக ரூ.5,00,000 அனுமதித்தது. பழங்குடியினர் இருளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு உரிமைகளை வழங்குவதற்காக திறந்த ஆன்லைன் ஏலம் விடப்பட்டது.

ரூ.3½ லட்சம் லாபம்

அதன் மூலம் ஏலம் எடுக்கும் உரிமைகளைப் பெற்று 80 குடும்பங்களை சேர்ந்த் (3 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களும் அவர்களது குடும்பத்தைச் சார்ந்த உறுப்பினர்களும்) பழங்குடியினர் குழு வழிகாட்டுதலின் கீழ் முந்திரி செடிகளின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்ய வேலை செய்தனர். இதன் மூலம் சுமார் 7,600 கிலோ முந்திரி கொட்டையை அறுவடை செய்து ரூ.9.70 லட்சத்துக்கு விற்பனை செய்தனர். மேலும் பராமரிப்பு செலவினம் மேற்கொள்ளும் வகையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் ரூ.1,00,000 சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்பட்டுள்ளது. பூச்சி கொள்ளி மற்றும் வேலிகள் போடுவதற்கும், இதர பராமரிப்பிற்காக ரூ.6.20 லட்சம் செலவினங்கள் போக ரூ.3.50 லட்சம் லபகமாக சம்பாதித்துள்ளார்கள். மேற்கண்ட மகளிர் சுயஉதவிக்குழுவினர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பிற மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றார்கள்.

இதுபோன்ற சிறப்பான செயல்பாட்டால் பிற மகளிருக்கு முன்னுதாரணமாக திகழும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்